பதிவு செய்த நாள்
23
ஜூன்
2021
04:06
விருதுநகர் : மகமாயி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஐம்பொன் சிலைகளை ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பி.புதுப்பட்டியில், மகமாயி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை ஒட்டி, மூன்று நாள் திருவிழா நடப்பது வழக்கம். அந்நேரத்தில், கோவில் பூஜாரி தன் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் மகமாயி அம்மன், வீரபத்திரர் விநாயகர், கருப்பசாமி, ராக்காச்சி அம்மன்.நடராஜர், சிவகாமி அம்மன், இருளப்ப சுவாமி, முத்து கருப்பசாமி ஐம்பொன் சிலைகளை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்று, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்வது வழக்கம்.
இக்கோவில், 1995ல் ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்ததை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து வந்த தொல்லியல் துறையினர், ஐம்பொன் சிலைகளை ஆய்வு செய்தனர்.சிலைகள், 400 ஆண்டுகள் பழமையானது என்றும்; மதிப்பு, 15 கோடி ரூபாய் இருக்கும் எனவும் தெரிவித்தனர். பின், பூஜாரி வீட்டின் பாதாள அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று கோவில் தக்கார் தேவி தலைமையில், காரியாபட்டி போலீசார் முன்னிலையில், அறநிலைய துறை அதிகாரிகள், பூஜாரி வீட்டில் இருந்த ஐம்பொன் சிலைகளை கைப்பற்றினர்.பரம்பரை பரம்பரையாக பூஜை செய்து வரும் மூர்த்தி பூஜாரி, சுவாமி சிலைகளை எடுத்து செல்லக் கூடாது. முன்னோர்கள் உருவாக்கிய ஐம்பொன் சிலைகளை நாங்கள் பத்திரமாக பாதுகாத்து வருகிறோம் எனக் கூறி கதறி அழுதார்.மேலும், அதிகாரிகளுக்கு அவர் சாபமிட்டார். 10 ஐம்பொன் சிலைகளும், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.