பதிவு செய்த நாள்
23
ஜூன்
2021
09:06
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 301 கோவில் அர்ச்சகர்களுக்கு தமிழக அரசின் நிவாரணத்தொகை வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பாக, அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை, 4,000 ரூபாய் மற்றும், 16 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது: கொரோனா ஊரடங்கு காலத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாததால், நிலையான மாத சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பட்டாச்சாரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக, ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள, 301 கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பட்டாச்சாரியர்கள் ஆகியோருக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு நாளொன்றுக்கு, 1,200 உணவு பொட்டலங்கள் வீதம், 36 நாட்களுக்கு, 43 ஆயிரத்து, 200 உணவு பொட்டலங்கள், 10.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் பிரகாஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.