ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் சிதைந்து பல ஆண்டுகளாகியும் இன்றும் சீரமைக்க படாததால் பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர். இதை விரைந்து சீரமைக்க அறநிலையத்துறை முன் வர வேண்டும்ஆண்டாள் நீராடிய குளமென பெருமை பெற்ற இக்குளம் நகரின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ஒருமுறை நீர் நிரம்பினால் 3 ஆண்டுக்கு நிலத்தடி நீருக்கு பாதிப்பு இருக்காது. குளத்தின் கிழக்கு கரைகளின் தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை சீரமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் அரசின் பல்வேறு விதிமுறைகள் காரணமாக இதுவரை குளம் சீரமைக்க படாமல் சிதைந்து வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்தும் குளத்தில் தண்ணீரை தேக்காமலும், தெப்ப விழாவை நடத்த முடியாமலும் உள்ளது. இது ஆண்டாள் பக்தர்கள், உள்ளூர் மக்களுக்கும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசும், அறநிலை துறை அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதைந்து கிடக்கும் திருமுக்குளத்தை காலதாமதமின்றி சீரமைக்க வேண்டும்.