பதிவு செய்த நாள்
25
ஜூன்
2021
10:06
பக்தர்களை வா என்றழைத்து வரம் தரும் சுந்தரராஜப் பெருமாள் சிவகங்கை மாவட்டம் வேம்பத்துாரில் குடிகொண்டிருக்கிறார். சங்கப்புலவர்கள் இவரை வழிபட்டு கவிபாடும் ஆற்றல் பெற்றனர்.
கவிகால ருத்ரர் என்னும் புலவரின் கனவில் தோன்றிய பெருமாள் அடியெடுத்துக் கொடுத்து பாட அருள்புரிந்தார். பெருமாளைத் தங்கள் ஊரிலேயே தங்கும்படி புலவர் வேண்டவே பெருமாளும் சம்மதித்தார். அதனடிப்படையில் பாண்டியமன்னர் ஜடாவர்ம குலசேகரனின் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமம் சூட்டப்பட்டு வழிபாடு நடந்தது. நாளடைவில் கோயில் சிதிலமடைந்தது. 25 ஆண்டுக்கு முன் மீண்டும் கோயில் கட்டப்பட்டது. கருவறையில் பெருமாள் ‘ஆகூய் வரதராக’ அருள்கிறார். ‘இடதுகையால் வா என அழைத்து வலது கையால் அருள்புரிபவர்’ என்பது பொருள். இடதுகை விரல்களை வளைத்து பக்தர்களை அருகில் அழைத்து வரம் தரும் விதமாக அபய முத்திரை காட்டி அமர்ந்திருக்கிறார். மேல் கைகளில் சங்கு, சக்கரம் உள்ளன. மார்பில் மகாலட்சுமி இருக்கிறாள். பூமிதேவியும், நீளாதேவியும் பெருமாளுக்கு அருகில் உள்ளனர்.
இத்தலத்தை தரிசித்தால் வைகுண்டத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். இக்கோயிலில் சுதர்சன சக்கரத்தை திருநீறில் வைத்து விஷ்ணு சகஸ்ரநாமம், லட்சுமி ஸ்தோத்திரம், குபேர, தன்வந்திரி, சுதர்சன மந்திரங்களை ஜபிக்கின்றனர். சாயந்தர பூஜை முடிந்ததும் மந்திர விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. நோய் தீர்க்கும் மருந்தாக இதனைப் பூசுகின்றனர். ‘அரியும் சிவனும் ஒன்றே’ என்ற அடிப்படையில் திருநீறு தரப்படுகிறது.
திருப்பணி நடந்த போது பூமியில் புதைந்த பூவராக பெருமாள் சிலை கிடைத்தது. தனி சன்னதியில் அருள்புரியும் இவருக்கு ரேவதி நட்சத்திரத்தன்று சர்க்கரைப் பொங்கல், கோரைக்கிழங்கு நைவேத்யம் செய்கின்றனர். கோரிக்கை நிறைவேற வராகருக்கு பூப்பந்தல் இட்டு அல்லது உதிரிப் பூக்களைச் சொரிந்து நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
கல்விக்கடவுளான ஹயக்ரீவருக்கு வியாழக்கிழமையில் தேன் அபிஷேகம் நடக்கிறது. மாணவர்கள் தீபம் ஏற்றி 12 முறை வலம் வந்து வணங்க கல்வி வளர்ச்சி ஏற்படும். கருடாழ்வார், பக்த ஆஞ்சநேயர், சுந்தரராஜ விநாயகர், பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமிக்கு சன்னதிகள் உள்ளன.
ஒருமுறை இங்கு பாண்டிய மன்னரின் சார்பாக 2008 அந்தணர்களுக்கு தானம் வழங்க ஏற்பாடானது. எண்ணிக்கையில் ஒரு அந்தணர் மட்டும் குறையவே, வேம்பத்துார் குளக்கரை விநாயகர் அந்தணராக வந்து பங்கேற்றார். இதனால் குளக்கரை விநாயகரோடு மற்றொரு அந்தணர் விநாயகரும் இங்குள்ளார். ‘இரண்டாயிரத்தெண் விநாயகர்’ என்னும் இவரை நீரில் மூழ்க வைத்து மழை பெய்ய வேண்டி வருணஜபம் செய்யும் நடைமுறை இங்குள்ளது. ‘இரண்டாயிரத்தெண்’ என்பதற்கு இரண்டாயிரத்து எட்டு என்பது பொருள்.
செல்வது எப்படி: மதுரை – ராமேஸ்வரம் சாலையில் திருப்பாச்சேத்தி சந்திப்பில் இருந்து 8 கி.மீ.,
விசேஷ நாட்கள்: புரட்டாசி கடைசி சனி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 6:00 – 11:00 மணி, மாலை 5:00 – இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 97903 25083
அருகிலுள்ள தலம்: திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோயில்(8 கி.மீ.,)
நேரம்: காலை 7:00 – 12:00 மணி, மாலை 5:00 – இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 04574 - 266 303, 266 495