பிரதோஷ நாளில் நந்தியை நாம் வழிபடுகிறோம். இதுவே மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நந்திதேவர் அவதரித்த தலத்தை தரிசித்தால் ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி உண்டாகும். இத்தலம் ஆந்திராவின் கர்நுால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம். ஜோதிர்லிங்க தலங்களில் இது இரண்டாவதாகும். இங்கு வசித்த சிலாத மகரிஷிக்கு சிவனருளால் நந்திகேசன், பர்வதம் என்னும் பிள்ளைகள் பிறந்தனர். ஒருமுறை நந்திகேசனை வாழ்த்துவதற்காக சில மகரிஷிகள் வந்தனர். நந்திகேசனைக் கண்ட அவர்கள், இன்னும் சில காலத்தில் நந்திகேசன் இறந்து விடுவான் என்பதை உணர்ந்தனர். விஷயத்தைக் கூற அவர் அதிர்ந்தார். நந்திகேசனோ, ‘‘சிவன் அருளால் பிறந்த நான் நீண்ட காலம் வாழ்வேன்’’ என்ற உறுதியுடன் தவத்தில் ஈடுபட்டார். தவத்தை ஏற்ற சிவன், அவரைத் தன் வாகனமாக்க ஏற்றுக் கொண்டார். அத்துடன் அவரது அனுமதியில்லாமல் யாரும் தன்னை தரிசிக்க முடியாது என வரமளித்தார். எனவே தான் நந்திதேவரை வணங்கி அனுமதி பெற்றே சிவனை தரிசிக்கிறோம். நந்திதேவரைப் போலவே அவரது தம்பி பர்வதனும் தவம் புரிந்து சிவன் குடியிருக்கும் பர்வத மலையாக இங்கிருக்கிறார். இங்குள்ள சிவனின் திருநாமம் மல்லிகார்ஜூனர். மல்லிகை, அர்ஜூனா மலர்களால் பூஜிக்கப்படுவதால் இப்பெயர் பெற்றார். இங்குள்ள அம்பிகை பிரமராம்பாள். இக்கோயிலில் மல்லம்மா என்னும் பெண் பக்திப்பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் விடுவது போல சிலை ஒன்று உள்ளது. பஞ்ச பாண்டவர் மடமும் இங்குள்ளது. நந்திதேவர் அவதரித்த தலம் என்பதால் அவரது சிலை பிரம்மாண்டமாக உள்ளது. இந்தியாவின் பெரிய நந்திகளில் இதுவும் ஒன்று. பாண்டவர்களில் ஒருவரான பீமனின் பாதங்கள் பாறை ஒன்றின் மீது செதுக்கப்பட்டுள்ளது. உடல் வலிமை பெற பக்தர்கள் இங்கு வேண்டுகின்றனர். இங்கிருந்து நாகார்ஜூன சாகர் அணைக்குச் செல்ல விசைப்படகு வசதி உள்ளது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் தரிசிப்பது சிறப்பு.