சமஸ்கிருத மொழியில் துலனா நாஸ்தி அதைவ
துளசி என்ற ஒரு கூற்று உள்ளது. துளசி ஒப்புயர்வற்ற குணங்கள் கொண்டது என்பது
பொருள். இந்தியர்களுக்கு துளசி மிகப் புனிதமான செடிகளுள் ஒன்று. உண்மையில்
துளசி ஒன்றுதான், ஒரு முறை பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட பிறகும் நீரில்
கழுவப்பட்டால் மீண்டும் பூஜைக்குப் பயன்படுத்தத் தக்கதாகக் கருதப்படுகிறது.
துளசி தன்னைத்தானே துõய்மைப்படுத்திக் கொள்ளும் சக்தி கொண்டதாக
ஏற்கப்பட்டுள்ளது. துளசியைப் பற்றிய ஒரு கதை உண்டு. துளசி சங்கசூடன் என்ற
விஷ்ணுலக தேவனின் மனைவி. பகவான் கிருஷ்ணர் தன்னை ஏமாற்றி பாவச் செயல்
செய்யுமாறு துõண்டினார் என்று அவள் நினைத்தாள். அதனால் பகவான் கிருஷ்ணர்
கல்லாக (சாளக்கிராமம்) மாறினார். அவளுடைய பக்தியையும் நேர்மை தவறாத
நடத்தையையும் கண்டு மகிழ்ந்த பகவான் தன் சிரசை அலங்கரிக்கத்தக்க புனிதமான
துளசிச் செடியாக அவள் திகழ்வாள் என்று ஆசிர்வதித்தார். மேலும், துளசி
இல்லையெனில் இறைவனுக்கு அளிக்கப்படும் எப்பொருளும் முழுமை பெறாது என்றும்
திருவாய் மொழிந்தருளினார். இதன் காரணமாகத் தான் நாம் துளசியை வணங்குவோம்.
துளசி,
விஷ்ணுவின் பத்தினியான லட்சுமியின் ரூபமாகவும் வணங்கப்படுகிறாள்.
நேர்மையான வழியில் நின்று, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வாழ
விரும்புகிறவர்கள் துளசியை பூஜிக்கின்றனர். பகவான், துளசியைத் தனது
தெய்வீகத் துணையாக ஏற்றுக் கொண்டார் என்று ஒரு புராணக் கதை உண்டு. ஆகவே,
இறைவனுக்கும் துளசிச் செடிக்கும் பொதுவாக நம் திருமணங்களில் காணப்படும்
அனைத்து ஆரவாரத்துடனும் மகிழ்ச்சியுடனும் விமரிசையான திருமண விழா ஒன்றும்
கொண்டாடப்படுகிறது. ஒருமுறை சத்யபாமா கிருஷ்ணனின் எடைக்குச் சமமாக தனது
செல்வங்கள் அனைத்தையும் வைத்தும், பகவான் அமர்ந்திருந்த தராசுத் தட்டு
கீழேயே இருக்கக் கண்டு செய்வதறியாது திகைத்தாள். அப்போது, ருக்மணிதேவி
மிகுந்த பக்தியுடன் ஒரு துளசி இலையை மற்றொரு தட்டில் வைக்கவும் தராசுத்
தட்டுகள் சமமாக நின்றன.
கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும் பொருள்
மிகவும் சிறியதாகவும் எளிமையானதாகவும் இருப்பினும், அது எல்லாச்
செல்வங்களுக்கும் மேலானதாகக் கருதப்படும் என்ற உண்மையை துளசியின் மகிமை
உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது. துளசி உயர்ந்த மருத்துவ குணங்கள்
வாய்ந்தது. ஜலதோஷம் உள்ளிட்ட பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
சமஸ்கிருத சுலோகம் ஒன்று கீழ் வருமாறு கூறுகிறது. துளசியின் கீழ் எல்லா
புனித தலங்களும் அமைந்துள்ளன. மேற்பகுதியில் அனைத்து தெய்வங்களும்
குடிகொண்டுள்ள. நடுப்பாகத்தில் அனைத்து வேதங்களும் உள்ளன. அத்தகைய துளசியை
நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.