பதிவு செய்த நாள்
25
ஜூன்
2021
10:06
பூமிதேவியை அரசுரனிடம் இருந்து மீட்ட பெருமாள் கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராகபெருமாளாக வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் விரைவில் வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.
பூமாதேவியை கடத்தி சென்று பாதாள உலகில் மறைத்து வைத்தான் அசுரன் இரண்யாட்சன். இதைக் கண்டு வெகுண்ட பெருமாள் ஒற்றை கொம்புள்ள பன்றியாக உருவெடுத்து அசுரனைக் கொன்றார். பூமாதேவியை தன் கொம்பில் சுமந்து வந்து முன்பிருந்த நிலையில் நிலைபெறச் செய்தார். அதன்பின் பூலோகத்தில், ஸ்ரீமுஷ்ணம் என்னும் தலத்தை இருப்பிடமாக்கி பூவராகப்பெருமாள் என்னும் பெயரில் கோயில் கொண்டார். ‘ பூ’ என்றால் பூமி. ‘வராகன்’ என்றால் பன்றி முகம் உள்ளவர். மேற்கு நோக்கிய கோலத்தில் காட்சி தரும் இவரது முகம் தெற்கு நோக்கி உள்ளது.
சாளக்கிராம கல்லால் ஆன சுயம்பு மூர்த்தியாக எட்டுத்தலங்களில் பெருமாள் அருள்புரிகிறார். அவை ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாச்ரமம், ஸ்ரீமுஷ்ணம். இங்கு அசுரனை வென்ற பெருமிதத்துடன் கைகளை இடுப்பில் வைத்தபடி முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக நிற்கிறார் பூவராகர். தாயாரின் திருநாமம் அம்புஜவல்லி. இங்குள்ள குழந்தையம்மன் சன்னதியில் தாயாரின் தோழியர் உள்ளனர். உற்ஸவர் யக்ஞ வராகமூர்த்தி எனப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி, ஆதிவராக மூர்த்தி, கண்ணன் ஆகியோர் உள்ளனர். விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில் இது. இங்குள்ள தீர்த்தம் நித்ய புஷ்கரணி.
பூவராகபெருமாளை வழிபட்டால் வாக்கு வன்மை, செல்வம், குழந்தைப்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் கிடைக்கும். குரு, ராகு, கேது தோஷங்கள் விலகும். பைக், கார் போன்ற வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். வாகனம் வாங்கியதும் பூவராகரை தரிசித்து அர்ச்சனை செய்தால் வாகனப் பயணம் இனிதாக அமையும். இதனை ‘வாகனம் படைத்தல்’ எனச் சொல்கின்றனர்.