துாத்துக்குடி-சிவகளை அகழாய்வில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
துாத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லுார், சிவகளையில் பிப்.,26 முதல் இரண்டாம் கட்ட அகழாய்வும் கொற்கையில் முதலாம் கட்ட ஆய்வும் நடக்கிறது. சிவகளையில் இதுவரை 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சிவகளை பரம்பில் தமிழக தொல்லியல் துறை இயக்குநர் பிரபாகரன் தலைமையில் நடக்கும் அகழாய்வில் நேற்று ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் 5 தாழிகள் மூடியுடனும் 10 தாழிகள் பெரிய அளவிலும் உள்ளன. ஒவ்வொன்றும் 2 அடி முதல் 4 அடி வரை உயரம் உள்ளது.சிவகளையின் வாழ்விடப்பகுதிகளில் ஆய்வு நடப்பதால் புதிய தொன்மைகள் கிடைக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.