பதிவு செய்த நாள்
30
ஜூன்
2021
09:06
குரோம்பேட்டை: நெமிலிச்சேரி அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.2 ஏக்கர் நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நேற்று அதிரடியாக மீட்கப்பட்டது.
குரோம்பேட்டை நெமிலிச்சேரியில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது.பழைய பல்லாவரத்தில், பல்லாவரம்- - துரைப்பாக்கம் சாலையை ஒட்டி, இக்கோவிலுக்கு சொந்தமான 2.2 ஏக்கர் நிலம் உள்ளது.அகற்றப்படும்அந்த நிலத்தை 2012ல் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து, மெக்கானிக் கடை, பழைய இரும்பு குடோன் என 11 கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். இதையறிந்த அதிகாரிகள், 2017-ல் ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு - 78-ன் கீழ், நடவடிக்கை மேற்கொண்டனர். ஹிந்து அறநிலையத் துறை இணை ஆணையர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.அந்த நீதிமன்றம், 2018ல் வெளியேற்று உத்தரவை பிறப்பித்தது. தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனரகம் உத்தரவின் படி, கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்கும் பணி, நேற்று காலை துவங்கியது.ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்சேகர்பாபு, ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன், ஜே.சி.பி., இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஒப்படைப்பு: இப்பணியை ஆய்வு செய்த பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை, யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும், அவற்றை அகற்றி சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அகஸ்தீஸ்வரர் கோவில் ஆக்கிரமிப்பு உட்பட, 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.