ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேரோட்டம்: பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2021 05:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்ட உற்சவம் இந்த வருடம் நடக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். வருடந்தோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று தேரோட்ட உற்சவம் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இதற்காக வைகாசி மாதமே நாள் செய்து, தேர் சீரமைப்புப் பணிகள் நடப்பது வழக்கம்.
கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக வழக்கமான தேரோட்ட திருவிழா நடக்காமல், கோயில் வளாகத்திற்குள் தங்கத் தேரோட்டம் மட்டும் நடந்தது. தற்போதும் இரண்டாம் அலை காரணமாக கோயில்கள் பூட்டிக்கிடக்கிறது. இந்நிலையில் இந்த வருடம் ஆகஸ்ட் 11 அன்று பூர நட்சத்திரத்தன்று தேரோட்ட திருவிழா நடத்தப்பட வேண்டும். இதற்காக கடந்த மாதமே நாள் செய்திருக்க வேண்டும். ஆனால், கோயில் நிர்வாகம் சார்பில் நாள் செய்யவில்லை. இதனால் இந்த வருடம் தேரோட்ட உற்சவம் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது நோய் பரவல் குறைந்துள்ள நிலையில் முற்றிலுமாக ஒழிந்து, இந்த வருடம் தேரோட்ட திருவிழா நடக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.