உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் கோயில்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. அறநிலையத் துறை அதிகாரிகள் இவற்றை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவாரத்தில் சுப்பிரமணியசுவாமி கோயிலும், செல்லம்பட்டி ஒன்றியத்தில் கட்டகருப்பன்பட்டி ஆனையூர் கிராமத்தில் ஐராவதீஸ்வரர் ஆலயமும் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான கோயில்கள். இந்தக் கோயில்களுக்கு பராமரிப்பு பணிக்காக ஸ்தானிகம், கைதவ, மத்வ, சுயம்பாதி, நட்டுவ, மந்திர புஷ்ப, அர்ச்சகர், ஓதுவார், மாலை கட்டி என பல்வேறு பணிகளுக்கான வருமானத்திற்கு மானிய நிலங்களாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியங்களில் உள்ளன. இந்தக் கோயில் நிலங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பராமரிப்பு இன்றி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளன. ஆனையூர் ராமன்: ஆனையூர் ஐராவதீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமாக 160 ஏக்கருக்கும் மேற்பட்ட மானிய நிலங்கள் உள்ளன. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தினசரி ஆறுகால பூஜைகள் நடந்து வந்தன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தபின் மானிய நிலங்கள் பராமரிப்பு குறைந்து விட்டது. மானிய நிலங்களில் இருந்து வரும் வருமானம் கிடைக்காமல் கோயில் வழிபாடும் குறைந்துபோனது. உசிலம்பட்டியை மையமாக வைத்து அறநிலையத்துறை அலுவலகம் உருவாக்கவும், அதிகாரிகளை நியமித்து ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்டு கோயில்களின் வருமானத்திற்கு வழி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.