வியாபார விஷயமாக நகரம் ஒன்றுக்குச் சென்றார் முல்லா. உதவிக்காக இளைஞன் ஒருவனை தன்னுடன் அழைத்துச் சென்றார். சந்தேகப்பிராணியான அவன் நகரத்தைக் கண்டதும் பிரமிப்புக்கு ஆளானான். ‘‘ஐயா...சந்து பொந்தெல்லாம் இங்கு இப்படி கூட்டம் நிரம்பி வழிகிறதே... போக வேண்டிய இடத்தை மக்கள் எப்படி அடையாளம் காண்பார்கள்? அவ்வளவு ஏன், மக்கள் தங்களைத் தாங்களே கூட அடையாளம் கண்டு கொள்வது சிரமம் தான்’’ என பிதற்றினான். பதில் ஏதும் கூறாமல் மவுனம் காத்தார் முல்லா. சந்தேகப் பிராணியுடன் வந்த முல்லா அன்றிரவு ஒரு விடுதியில் தங்கினார். அங்கு வெளியூர் பயணிகள் பலர் தங்கியிருந்தனர். ‘‘ஐயா...காலையில் நான் கண் விழிக்கும் போது என்னையே மறந்து விட்டால் என்ன செய்வது...வழி காட்டுங்கள்’’ என பரிதாபமாகக் கேட்டான் சந்தேகப் பிராணி. முல்லா சிரித்தபடி, ‘‘கவலைப்படாதே. கருப்புத் துணியை உன் காலில் கட்டி விடு. காலையில் எழுந்ததும் காலைப் பார். கருப்புத் துணி இருந்தால் நீர்தான் அது என அடையாளம் கண்டு கொள்’’ என்றார். அவனும் சம்மதித்து காலில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு படுத்தான். அருகே படுத்திருந்த முல்லா நள்ளிரவில் எழுந்தார். அவன் ஆழ்ந்து உறங்குவதைக் கண்டார். அவன் கட்டியிருந்த கருப்புத் துணியை அவிழ்த்துத் தன் காலில் கட்டிக் கொண்டார். "ஐயோ நான் காணாமல் போய் விட்டேனே. காலில் இருந்த துணியைக் காணோமே" என கூச்சலிட்ட சந்தேகப் பிராணி முல்லாவைப் பார்த்தான். ‘‘நான் அகப்பட்டு விட்டேன் நீர் தான் நான்’’ என கத்தினான். அதைக் கேட்ட மற்ற பயணிகள் அருகில் வந்து விசாரித்தனர். நடந்ததை முல்லா அவர்களுக்கு விளக்கினார். சந்தேகப்பிராணியைப் பார்த்து அவர்கள் வாய் விட்டுச் சிரித்தனர். பிறகு முல்லா அவனுக்கு ஏற்பட்டிருந்த சந்தேகப் பிரமையைப் போக்கி தெளிவுபடுத்தினார்.