பதிவு செய்த நாள்
19
ஜூன்
2012
03:06
47வது படலத்தில் ஸோமாஸ்கந்த ஸ்தாபன முறை கூறப்படுகிறது. இங்கு அமைப்பு முறை பிரகாரம் ஸ்தாபனத்தை கூறுகிறேன் என்று பிரதிக்ஞை, முதலில் ஸோம லக்ஷணம் அல்லது உமாஸஹித தேவரின் லக்ஷணம் கூறப்படுகிறது. இவர் நான்கு கை, மூன்று கண் ஜடாமகுடத்தால் அலங்கரிக்கப்பட்டு எல்லா ஆபரணத்துடன் கூடியதாகவும் வரதாபய ஹஸ்தமும் பார்ஸ்வ ஹஸ்த்தத்தில் மானும் மழுவும் உடையவராகும் பூணூல் தரித்தவராகவும் பிரஸன்னாத்மாவாகவும் இடது பாகத்தில் கவுரியுடன் கூடியதாக இருப்பவர் ஸோமன் என்று ஸோமேச லக்ஷணம் கூறப்படுகிறது. கவுரி லக்ஷணம் தேவி ஸ்தாபன முறைப்படி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு இந்த விஷயத்தில் சூத்ரபாதம் செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது. பிறகு ஸோமாஸ்கந்த மூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. ஸ்வாமி அம்பாளின் மத்தியில் ஸ்கந்தரை அமைக்கவும் என கூறி ஸ்கந்தரின் லக்ஷணம் கூறப்படுகிறது. அந்த ஸ்கந்தரானவர், இரண்டு கண், இரண்டு கை, கரண்ட மகுடம் சர்வாபரண பூஷிதம் வலது கையில் தாமரை புஷ்பம், தொங்க விடப்பட்ட இடது கை, அல்லது இரண்டு கைகளிலும் தாமரை புஷ்பம், நாட்டிய கோலம் அல்லது அம்பாளின் மடியில் அமர்ந்த கோலம், தாமரை புஷ்பம் இல்லாத கை அல்லது அமர்ந்த கோலம் நின்ற கோலம் ஆகிய இப்பேர்பட்ட அமைப்பு உடையவர் ஸ்கந்தர் ஆவர் என கூறப்படுகிறது. பிறகு ஸ்கந்தரும் உமாவும் இல்லாத மூர்த்தி சுகாசனர் என்று சுகாசன மூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. இவ்வாறு ஸோமாஸ்கந்த சுகாசன மூர்த்திகளின் லக்ஷணம் கூறப்பட்டு ஸோமாஸ்கந்த மூர்த்தியின் பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. இங்கு நல்ல காலத்தில் அங்குரார்ப்பண பூர்வமாக ஸ்வாமி அம்பாள், குஹன் இவர்களுக்கு ரத்னநியாச முறை கூறப்படுகிறது. அந்தந்த பிரதிஷ்டையில் சொல்லப்பட்டபடி மந்திரங்களுடன் அந்தந்த ரத்னன் நியாஸம் செய்யவும் என கூறப்படுகிறது. மேலும் அம்பாளுக்கு ஸ்வர்ணபத்மமும், ஸ்கந்தருக்கு ஸ்வர்ண மயூரமும் வைக்கலாம் என்று வேறு ஒரு விதி முறை கூறப்படுகிறது. பிறகு நயனோன் மீலனம், பிம்பசுத்தி, கிராம பிரதட்சிணம் ஜலாதி வாசம் ஆகியவைகள் முன்பு போல் செய்யவும் என கூறப்படுகிறது.
பிறகு யாகத்திற்காக மண்டபம் அமைத்து அங்கு வேதிகை குண்ட அமைப்பு முறை கூறப்படுகிறது. பிறகு சிற்பியை திருப்தி செய்து விட்டு பிராம்மண போஜனம், புண்யாகப் ரோக்ஷணம், வாஸ்து ஹோமம் இவைகளை செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து அதன் மத்தியில் சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலத்திலிருந்து பிம்பத்தை எடுத்து மண்டபத்தை அடைந்து ஸ்நபனம் செய்ய வேண்டும். பிறகு அந்த மூன்று பிம்பங்களுக்கும் ரக்ஷõபந்தனம் செய்து மூன்று வித அதிவாசம் செய்யவும். தனித்தனியான வஸ்திரங்களால் மூடவும் பிறகு சிவனுடைய சிரோதேசத்தில் சிவகும்பம், அதற்கு வடக்கு பாகத்தில் அம்பாளுக்கு வர்த்தனி, தெற்கு பாகத்தில் ஸ்கந்த கும்பம் வைத்து ரூபதியான முறைப்படி சந்தனாதிகளால் பூஜிக்கவும். சுற்றிலும் 8 கும்பங்களில் வித்யேஸ்வரர்களை பூஜித்து ஸ்தாபிக்கவும். பிறகு அந்தந்த மூர்த்தி ஸ்தாபனப்படி அந்தந்த மூர்த்திக்கு தத்வதத்வேஸ் வரமூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவும். பிறகு குண்டமமைத்து முறைப்படி ஹோமம் செய்யவும் என கூறி ஹோம முறை சுருக்கமாக கூறப்படுகிறது. இங்கு முன்பு கூறிய பிம்பங்கள் தனிமையான பீடமாயிருப்பின் தனிமையான மண்டபம் அமைக்கவும் என கூறப்படுகிறது. மறுதினம் ஆசார்யன் தேவகும்ப அக்னிகளை மூர்த்திபர்களுடன் பூஜித்து யஜமானனால் கொடுக்கப்பட்ட வஸ்திராதி தட்சிணைகளை பெற்றுக் கொண்டு மந்திரநியாசம் செய்யவும். இங்கு அம்பாள் ஒரே பீடமாக இருந்தால் அம்பாள் ஹ்ருதயத்தில் மந்திரநியாசம் செய்யவும். இவ்வாறு கும்பாபிஷேகமும் செய்யவும். பிறகு விசேஷமாக கல்யாண கர்மாவும் செய்யலாம் என அறிவிக்கப்படுகிறது. இங்கு கூறப்படாததை சாமான்ய பிரதிஷ்டைபடி செய்ய வேண்டும். இந்த பிரதிஷ்டை செய்பவன் இங்கு சித்திகளின் பலனை அனுபவித்து முடிவில் சிவ ஸாயுஜ்யம் அடைகிறான் என்பது பலச்ருதி. இவ்வாறு 47 வது கருத்து சுருக்கம் ஆகும்.
1. சிரேஷ்டமான ஸோமாஸ்கந்த பிரதிஷ்டையை கூறுகிறேன். அதன் அமைப்பின் முறை இப்பொழுது கூறப்படுகிறது.
2. நான்கு கைகள், மூன்று கண், ஜடாமகுடத்துடனும் எல்லாவித ஆபரணத்துடனும் வரதம், அபயம் என்ற முத்ரையை கீழ் இருகைகளிலும்
3. மேல் இரண்டு கைகளில் மான், மழுவேந்தியவரும் இடது காதில் கர்ணபத்ரமும் வலது காதில் மகரகுண்டலத்தையுடையவரும்
4. பூணூலுடன் பிரஸன்ன முகமுடையவரும் மடக்கப்பட்ட இடது காலையும் தொங்கவிடப்பட்ட வலது காலையுடையவரும் இடப்பாகத்தில் கவுரியையுடையவரும்
5. எல்லா லக்ஷணமும், எல்லாவித ஆபரணபூஷிதருமாக இருப்பவர் ஸோமேசராவர். (ஸோமாஸ்கந்த லக்ஷணம்) நெற்றி மூக்கு, தொப்பூழ், குஹ்யபிரதேசம் கால்கள், குதிகால் மத்தியிலும்
6. இடுப்பு பாகத்தையும் சேர்ந்துள்ள சூத்ரம், மத்ய சூத்ரமெனப்படும், யோநிபாகத்தின் அடியிலிருந்து முகத்தின் அடிபாகம் வரை கழுத்தின் பக்கத்திலிருந்தும்.
7. ஸ்தனக்காம்பிலிருந்தும் இடுப்பின் பார்ச்சவத்திலிருந்தும், உஷ்ணீச பாகத்திலிருந்தும் பிடரி பக்கமும் கழுத்தின் பின்பக்கமும் மத்தியிலிருந்தும்
8. உள்ள சூத்ரம் ப்ருஷ்ட சூத்ரமெனப்படும், பார்வங்களிலிருந்து ஒன்றரை அளவும் இரண்டு பார்சவங்களில் விட்டு, துடை நீளம் வரையிலும்
9. மடக்கப்பட்ட கால் பதினைந்து அங்குலமும் தொங்குகின்ற கால் மூன்று (ஆறு) அங்குலமாகவும் இடது முழந்தாளின் கடைசியான ஸூத்ரத்திலிருந்து சரீர பாதி அளவிலும்
10. துடைபாக கடைசியிலிருந்து முதுகுத்தண்டு வரையிலும், பாததளத்தின் நுனியிலிருந்து துடையின் நடு பகுதி வரையிலும் இடைப்பட்ட அளவு மூன்றங்குலம்
11. தொங்குகிற காலசூத்ரத்திலிருந்து தலை பகுதி வரை ஏழரை அங்குலமாகும். கடகமுத்ரையிலிருந்தும், மணிக்கட்டிலிருந்தும் இடுப்பின் நுனி எல்லை வரையும்
12. தொப்பூழிலிருந்து மணிக்கட்டு வரையிலும் பதினாறங்குலம் ஆகும். வரதஹஸ்தமெனில் அதன்பின் பாகத்திலிருந்து தொப்பூழ் வரை ஸமமாகும்.
13. இடதுபாகத்தில் தேவிபிரதிஷ்டையில் கூறிய வண்ணம் பிரதிஷ்டை செய்த அம்பாளுடன் கூடியிருப்பதால் (உமாவுடன் கூடியவர்) ஸோமர் என்றும் ஸ்கந்தனுடன் கூடியிருப்பதால் ஸோமாஸ்கந்தர் என்று கூறப்படுகிறார்.
14. சுவாமியின் பத்தில் ஒரு பாக உயரமோ பத்தில் இரண்டு பாக உயரமோ 10 ல் மூன்று நான்கு பாக உயர அளவுகளாலோ ஸ்கந்தரை நடுவில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
15. இரண்டு கண், இரண்டு கை, கரண்ட மகுடமுடையவரும், இரு காதுகளிலும் மகர குண்டலங்களை அணிந்திருப்பவரும் எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரும்
16. வலது கையில் தாமரையையும் இடது கையை தொங்கும் அமைப்பாகவுமோ (அல்லது) இரு கைகளிலும் தாமரையையுடையவராகவோ நடன அமைப்பிலுள்ளவராகவோ
17. தேவியின் மடியில் அமர்ந்திருப்பவராகவோ தாமரையில்லாத கையையுடையவராகவோ அமர்ந்திருப்பவராகவோ நின்ற திருக்கோலத்திலோ இருப்பவர் ஸ்கந்தர் ஆவர்.
18. ஸ்கந்தர் உமையின்றி இருப்பவர் சுகாஸனராவர். உமையுடன் கூடியவரிடத்திலும் ஸோமாஸ்கந்தர் அமைப்பிலும், ஸுகேசர் அமைப்பிலும் உருவ அமைப்பு சமமாகும்.
19. அங்குரார்ப்பணம் முதற்கொண்டதான இந்த பிரதிஷ்டையானது நல்ல நேரத்தில் செய்ய வேண்டும். தேவனுக்கு ரத்னந்யாஸம் செய்து, தேவிக்கும், குஹனுக்கும் ரத்னந்யாஸம் செய்யவும்.
20. அல்லது (சுவாமிக்கு ரத்னந்யாஸம் செய்து) தேவிக்கு தங்கத்தாமரையையும் ஸ்கந்தனுக்கு தங்க மயிலையும் நியஸிக்க வேண்டும். அந்தந்த மூர்த்தியின் பிரதிஷ்டையில் கூறிய உருவத்யானம் மந்திரங்களால் கூடியதாக
21. அந்தந்த பத்மபீடத்தில் நன்கு இருக்கமாக பிரதிஷ்டை செய்யவும். நயநோன்மீலநம் (கண்திறத்தல்) பிம்பசுத்தி, க்ராமப்ரதக்ஷிணம்
22. ஜலாதிவாஸம், மண்டபிரவேசனம் முதலியன செய்யவணும். எண்கோணம், வட்டவடிவ குண்டம், நாற்கோண குண்டமோ அமைக்க வேண்டும்.
23. ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையுள்ள குண்டம் அமைக்கவும். சில்பியை திருப்தி செய்து அனுப்பி அந்தணர்களுக்கு உணவளித்தலை செய்விக்க வேண்டும்.
24. புண்யாஹப்ரோக்ஷணம், வாஸ்துசாந்தி, சயனத்தை தயார்செய்து ஸ்நபனம் முதலியவை செயற்பாலது.
25. மூன்று பிம்ப உருவங்களுக்கும் ரக்ஷõ பந்தனம் செய்தது, பிறகு சயனத்தில் எழுந்தருளச் செய்து மூன்று கும்பங்கள் அமைத்து வஸ்திரங்களால் அழகுபடுத்தவும்.
26. சிவனின் தலைபாகத்தில் சிவகும்பமும், அதன் வடக்கில் வர்த்தனியையும் வைத்து ஸோமாஸ்கந்த பிரதிஷ்டையாகில் தெற்கில் கடம் ஸ்தாபித்து
27. ஸ்கந்தமந்திரங்களினால் பூஜித்து சந்தனம், புஷ்பங்களால் அர்ச்சிக்க வேண்டும். பிறகு பிம்ப லக்ஷண ரூபத்யான மறிந்த புத்தியுள்ள ஆசார்யன்
28. அக்கும்பங்களை சுற்றி அஷ்டவித்யேஸ்வர கடங்களுடன் ஸ்தாபித்து அந்தந்த பிரதிஷ்டா முறைப்படி தத்வத்வேஸ்வர மூர்த்தி, மூர்த்தீஸ்வரந்யாஸம் செய்ய வேண்டும்.
29. குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம், (பூஜை முறையை) செய்து ஸமித்து, நெய், அன்னம் பொரி, எள், தான்யம் பயறுகளாலும் முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும்.
30. புரசு அத்தி, அரசு, ஆல் சமித்துகளால் கிழக்கு முதலிய நான்கு திசைகளிலும் வன்னி, கருங்காலி, நாயுருவி, வில்வ சமித்துகளால் தென்கிழக்கு முதலிய நான்கு திசை மூலைகளிலும்
31. பிரதானத்தில் முன்பு சொன்னபடி புரச சமித்தையும் ஹோமம் செய்து எல்லா க்ரியைகளையும் செய்து பூர்ணாஹுதி செய்ய வேண்டும். ஸ்கந்தருக்கும், தேவிக்கும் பிரதான குண்டத்தில் தர்பண தீபனம் செய்ய வேண்டும்.
32. இந்த பிம்பங்கள் தனித்தனியான பீடமாயிருப்பின் தனித்தனியாக மண்டபம் அமைக்க வேண்டும். இரண்டாம் நாள் தேவர், கும்பம் அக்னி, இவைகளை முன்புபோல் பூஜை செய்ய வேண்டும்.
33. தசநிஷ்கம் (10 வராஹன்) முதலான தட்சிணையை மூர்த்திபர்களுக்கும் கொடுத்து வஸ்த்ரம் தங்க மோதிரங்களால் குருவான ஆசார்யனை பூஜிக்க வேண்டும்.
34. கும்பத்திலிருந்து மூலமந்திரத்தை எடுத்து (க்ரகித்து) பரமேச்வரனிடம் சேர்க்கவும். வர்த்தனியிலிருந்து மூலமந்திரத்தை ஸ்வாமி பீடத்தில் சேர்க்க வேண்டும்.
35. ஸ்வாமி பீடத்துடன் தேவி சேர்ந்திருந்தால் வர்த்தனீ பீஜத்தை (மூலமந்திரம்) அம்பாளிடம் சேர்க்க, குஹகும்ப மந்திரத்தை குஹனிடம் சேர்க்க வேண்டும்.
36. மற்ற வித்யேச்வர கும்பங்களை பீடங்களை சுற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த மூர்த்தங்கள் தனித்தனியான பீடங்களாயிருப்பின் தனித்தனி மண்டபம் (யாக) அமைத்து பூஜைகளை செய்ய வேண்டும்.
37. முறைப்படி விசேஷமான கல்யாணோத்ஸவம் செய்யவேண்டும். இப்படலத்தில் கூறாததை பொதுவான ஸ்தாபனத்தில் (பிரதிஷ்டையில்) கூறியபடி செய்ய வேண்டும்.
38. உயர்ந்த மனிதன் இவ்வாறு ஸோமாஸ்கந்தர் முதலிய பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் விருப்ப பயன்களையும் சிவஸாயுஜ்ய பதவியையும் அடைகிறான்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸோமாஸ்கந்த பிரதிஷ்டையாகிற நாற்பத்தியேழாவது படலமாகும்.