மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர் சுவாமி விவேகானந்தர்; இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. சிறு வயதிலேயே தியானம் பழகினார். கோல்கட்டாவில் உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லுாரியில் தத்துவம் பயின்றார்.ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டு ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராக மாறினார். 1886ல் ராமகிருஷ்ணர் மறைவுக்கு பின், நான்கு ஆண்டுகள் நாடு முழுதும் சுற்றி ஆன்மிக சொற்பொழிவாற்றினார். இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடைய செய்தன. இந்தியா மட்டுமின்றி மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவம் குறித்து பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893-ல், அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த உலக மத மாநாட்டில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பெரும் புகழ் பெற்றது. ஹிந்து மதத்தின் புகழை உலக அரங்கில் நிலைநிறுத்தினார். ராமகிருஷ்ணர் மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார். 1902 ஜூலை 4-ம் தேதி தன் 39-ம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.