பதிவு செய்த நாள்
04
ஜூலை
2021
02:07
கோவில் சொத்துக்களில் உள்ள கட்டடங்கள், குடியிருப்புகளுக்கான வாடகையை நிர்ணயிக்க, அந்தந்த கோவில் நிர்வாகத்தினருக்கு அதிகாரம் அளிப்பதில் பிரச்னை எழுவதால், அதற்காக தனிக்குழு அமைக்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், 36 ஆயிரத்து 615 கோவில்கள்; 56 மடங்கள்; 57 மடத்துடன் இணைந்த கோவில்கள்; 1,721 குறிப்பிட்ட அறக்கட்டளைகள்; 189 அறக்கட்டளைகள்; 17 சமண கோவில்கள் உள்ளன.இவற்றுக்கு சொந்தமாக நன்செய், புன்செய், மானாவாரி என, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.
கோவில்களுக்கு சொந்த மாக, 22 ஆயிரத்து 600 கட்டடங்கள்; 33 ஆயிரத்து 665 மனைகள், 1.23 லட்சம் பேருக்கு விவசாய நிலங்கள் வாடகை, குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அதன் வாயிலாக கோவில்களுக்கு, 10 ஆண்டுகளில் 1,365 கோடி ரூபாய்; ஆண்டுக்கு, 135 கோடி ரூபாய் மட்டும் வருமானம் கிடைக்கிறது. கோவில் மனைகள், கட்டடங்கள் நியாய வாடகை நிர்ணயம் செய்ய, அறநிலையத் துறை சட்டம், 1959, சட்டப்பிரிவு, 34ஏ - யின் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மண்டல இணை தொடர்ச்சி 5ம் பக்கம்கமிஷனர், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் அல்லது அறங்காவலர் குழு தலைவர், பதிவு துறையின் மாவட்ட பதிவாளர் அடங்கிய குழு அமைக்கப் பட வேண்டும்.
அக்குழு வாயிலாக, வணிகம், குடியிருப்பு போன்ற பயன்பாடு உள்ள மனைகள் மற்றும் கட்டடங்களுக்கு, நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் வர வேண்டிய, குத்தகை நிலுவைத் தொகையை வசூல் செய்யவும், விவசாய நிலங்களுக்கு நியாய வாடகை நிர்ணயிக்கவும், குத்தகை செலுத்த மறுக்கும் குத்தகைதாரர்களை வெளியேற்றவும், தமிழ்நாடு பொது பொறுப்புரிமை எனும் விவசாய நிலங்கள் ஒழுங்குபடுத்தும் மேலாண்மை சட்டம், 1961 உள்ளது.
அச்சட்டத்தின் கீழ், அறநிலையத்துறை வாயிலாக, தனி துணை கலெக்டர் தலைமையிலான வருவாய் நீதிமன்றங்களில், வழக்கு பதிவு செய்து தீர்வு காணப்பட வேண்டும்.பல கோடி இழப்புகோவில் சொத்துக்களை பயன்படுத்தும் 40 சதவீதத்திற்கு மேற்பட்டோர், முறையாக குத்தகை, வாடகை செலுத்துவதில்லை. தனியாரை விட அறநிலையத் துறை குறைந்த வாடகை நிர்ணயம் செய்திருந்தாலும், அதுவும் அதிகமாக இருப்பதாக கூறி, வாடகை செலுத்த மறுக்கின்றனர். இந்நிலையில், கோவில்களில் வாடகைதாரர்கள் பிரச்னைக்கு தீர்வு காண, கோவில் இடங்களை ஆக்கிரமித்தவர்கள், வாடகைதாரர்களாக மாற்றப்படுவர்; அவர்களை வரன்முறைப்படுத்திய பின், நியாய வாடகையில் திருத்தம் செய்யப்படும் என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, ஆன்மிக நல விரும்பிகள் தரப்பில் கூறியதாவது:அறநிலையத்துறை சட்டத்தில், கோவில் சொத்துக்களுக்கு வாடகை, குத்தகை நிர்ணயத்திற்காக வழிகாட்டி நெறிமுறை இதுவரை ஏற்படுத்தவில்லை என்பது, தகவல் உரிமை அறியும் சட்டத்தின் வாயிலாக வெளிப்பட்டுள்ளது.முன்னர், கோவில் சொத்துக்களுக்கு வழிகாட்டி மதிப்பீட்டின் படி குத்தகை, வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் கோவில் சொத்துக்கள் உள்ள இடங்களின் அருகே உள்ள குடியிருப்பு, கட்டட வாடகையை கேட்டறிந்து, அதைவிட சற்று குறைவான வாடகை, கோவில் நிர்வாகத்தினரால் நிர்ணயிக்கப்படுகிறது.பல கோவில்களில் இதற்கான வாடகை நிர்ணய குழு செயல்படுவதில்லை.
அந்தந்த கோவில் செயல் அலுவலர், உதவி, துணை, இணை கமிஷனர்களே வாடகை நிர்ணயத்தில் முடிவு செய்கின்றனர். அவ்வாறு செய்வதன் வாயிலாக, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சுய லாபம் பார்ப்பதோடு, வேண்டப்பட்டவர்களுக்கு வாடகை குறைத்தும் வழங்குகின்றனர். பல கோவில்களில், வாடகை வசூலிப்பதில் விட்டு கொடுத்து, வாடகை செலுத்தாமல் இருக்க, கோவில் அலுவலர்களே ஆலோசனை வழங்கி, லஞ்சம் வாங்கிக் கொள்கின்றனர்.கோவில் சொத்துக்களில் உள்ள கட்டடங்கள், குடியிருப்புகளை வாடகைக்கு விட, அந்தந்த கோவில் நிர்வாகத்தினருக்கு உரிமை அளிப்பதால் தான், இது போன்ற பிரச்னைகள் எழுகின்றன. இதற்கு நிரந்தர தீர்வாக, நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, திருப்பணிக்கான அனுமதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குழுவை போல, வாடகை நிர்ணயம் செய்ய, தலைமையக கட்டுப்பாட்டில், அறநிலையத் துறை மாவட்டம் வாரியாக குழு அமைக்க வேண்டும். அவர்கள், கோவில் சொத்துக்கள் அமைந்துள்ள இடங்களின் வழிகாட்டி மதிப்பை வைத்து, வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். வாடகையை, ஆன்லைன் வாயிலாக, கோவிலுக்கு சேரும் வகையில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாழடைந்த கட்டடம்!: கோவில்களுக்கு சொந்தமான கட்டடங்களை, கோவில் நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், பல கட்டடங்கள் அடிப்படை வசதி இல்லாமல், பாழடைந்து காணப்படுகின்றன. அதை சுட்டிக்காட்டியும், பலர் வாடகை செலுத்தாமல் உள்ளனர். எனவே, கோவில்களின் சொத்துக்களில் உள்ள கட்டடங்களை பராமரிக்க, அறநிலையத்துறை தனி பிரிவை உருவாக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட நகரங்களில், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களையும், பாழடைந்த கட்டடங் களையும் ஆய்வு செய்து அகற்ற வேண்டும். அங்கு, நவீன முறையில் குடியிருப்பு, வணிக வளாகம் கட்டிக் கொடுத்தால், கோவில்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.