பதிவு செய்த நாள்
04
ஜூலை
2021
03:07
ஈரோடு: கொடுமணல் அகழாய்வில், சங்க கால கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கொடுமணல். இங்கு, சங்க கால மனிதர்கள் பயன்படுத்தியஇரும்பு பொருட்கள், அலங்கார பொருட்கள்உள்ளிட்டவற்றை, தமிழக தொல்லியல் துறை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், கொடுமணலில் மீண்டும் நடந்து வரும் அகழாய்வில், சங்க காலத்தைச் சேர்ந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, அகழாய்வு பிரிவு திட்ட இயக்குனர் ரஞ்சித் கூறியதாவது:கொடுமணலில் ஈமக்காடு பகுதியில் அகழாய்வு செய்ததில், மூன்று வகையான கல்லறைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.இறந்தோரை முதுமக்கள் தாழிகளில் வைத்து அடக்கம் செய்வது; தாழியுடன் பலகை கற்களை வைத்து அடக்கம் செய்வது; தாழிகள் இல்லாமல் பலகை கற்களை வைத்து அடக்கம் செய்வது என்ற மூன்று முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. தற்போது, மூன்று இடங்களில் அகழாய்வு குழிகள் தோண்டியதில், பலவடிவ பானை, கூம்பு வடிவ குவளை உள்ளிட்டவை கிடைத்துள்ளன.கல்லறையில் கிடைத்துள்ள மண்டையோட்டை, மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர்கள், டி.என்.ஏ., பகுப்பாய்வு செய்ய உள்ளனர். கொடுமணலில், தொழிற்கூடங்கள் இருந்த பகுதியில், நீண்ட கால்வாய் காணப்பட்டது. அதை ஆய்வு செய்த போது, அது கிணற்றுக்கு செல்லும் படிக்கட்டு என்பது தெரிந்தது.கிணற்றில் தண்ணீர் எடுக்க, இரு திசைகளில் செல்லும் வகையில் படிக்கட்டு அமைத்துள்ளனர்.கிணற்றை, ௧0 மீட்டர்நீள, அகலம், 2.36 மீட்டர் ஆழத்தில் பாறைகளை குடைந்து தோண்டி, சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர்.அந்த சுற்றுச்சுவர் பகுதியளவே வெளிப்பட்டுள்ளது. முழு சுவரை கண்டுபிடிக்க, மேலும் அகழாய்வு செய்ய உள்ளோம்.இங்கு கிடைத்த 2,000க்கும் மேற்பட்ட பானை ஓடுகளில், குறியீடுகளும், அம என்ற தமிழ் பிராமி எழுத்துகளும் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.