பதிவு செய்த நாள்
05
ஜூலை
2021
04:07
பல்லடம்: பக்தர்களின் காணிக்கையை நம்பியே வாழ்க்கை நடத்தி வருவதால், பணியை நிரந்தரமாக்க வேண்டும் என, கோவில் பூசாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூசாரிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் வாசு விடுத்துள்ள அறிக்கை: இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டு, ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் பூசாரிகள், பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை நம்பி குடும்பம் நடத்தி வருகின்றனர். நிரந்தர ஊதியம் இல்லாததால், இதுபோன்ற பூசாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. கொரோனா காலத்தில் அரசு வழங்கிய நிவாரண உதவிகள், பொருட்கள் பூசாரிகளுக்கு பெரும் உதவியாக அமைந்தது. கடந்த காலங்களில், பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஊரடங்கு காரணமாக, கோவில்கள் திறக்கப்படாததால், தமிழகம் முழுவதும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான பூசாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஐந்து ஆண்டுக்கு மேல் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என, அறநிலையத்துறை அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, பூசாரிகளை பணிநிரந்தரம் செய்வதுடன், அவர்களுக்கு மாத ஊதியம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.