பதிவு செய்த நாள்
08
ஜூலை
2021
05:07
கோவை : நேற்று தேய்பிறை பிரதோஷ விழாவையொட்டி, சிவாலயங்களில் திரளான பக்தர்கள், சமூக இடைவெளியோடு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோட்டை சங்கமேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று மாலை 4:30 மணிக்கு பிரதோஷ விழா நடந்தது. அப்போது சிவாச்சாரியர்கள், வேதவிற்பன்னர்கள் சிவஸ்லோகங்களை பாராயணம் செய்ய, மங்கள வாத்தியங்கள் முழங்க, நந்திமீது சிவபெருமான் எழுந்தருளி கோவிலை பிரதக்ஷனம் வந்தார்.தொடர்ந்து சிவலிங்கத்திற்கும், நந்திகேஸ்வரருக்கும் சகலதிரவிய அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்கவோ, பார்வையாளராக இருக்கவோ பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.அனைத்து நிகழ்வுகளும் நிறைவடைந்த பின்பு, பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். நந்தியெம்பெருமானையும், சிவபெருமானையும் வணங்கிய பக்தர்கள் தொடர்ந்து, அடுத்தடுத்துள்ள சன்னிதிகளில், வழிபாடு செய்து திரும்பினர். தேய்பிறை பிரதோஷமான நேற்று, திரளான பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டு சென்றனர். பேரூர் பட்டீசுவரசுவாமி கோவில் மற்றும் பேட்டை விஸ்வேஸ்வரசுவாமி கோவிலிலும், பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.