பதிவு செய்த நாள்
08
ஜூலை
2021
05:07
திட்டத்தை செயல்படுத்த அறநிலையத் துறை முன்வருமா?
சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தீர்த்த குளத்தில், ஆண்டு முழுதும் தண்ணீர் நிறைந்திருக்க, நீரியல் வல்லுனர் தரும் யோசனையை, ஹிந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில், ஆண்டுதோறும், தை மாத பவுர்ணமி நாளில், மூன்று நாட்கள் தெப்ப உற்சவம், விமரிசையாக நடத்தப்படும். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.
எதிர்பார்ப்பு: தொன்மை வாய்ந்த இந்த குளத்தை அமைக்கும் போது, தென்மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு ஆகிய நான்கு மூலைகளில் இருந்தும் மழை நீரை குளத்துக் கொண்டு வந்து சேமிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பெய்யும் மழை நீரும், குளத்துக்குள் செல்ல இரு வழிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.கபாலி தீர்த்த குளத்தில், மழை நீரை செறிவூட்டும் பணிகள், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வாயிலாக குளத்துக்கு கழிவு நீர் கலந்த மழை நீர் வருவது தடுக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் கிடைக்கும் நீர், கோவில் குளத்தில் முழுமையாக சேமிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கோடைக் காலத்தில் கோவில் குளம் வறண்டு விடுகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரை குளம் வறண்டு கிடப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், தீர்த்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
கபாலீஸ்வரர் கோவில் குளத்தில், ஆண்டு முழுதும் தண்ணீர் நிரம்பி நிற்க, நீரியல் வல்லுனர் கள் பல ஆண்டுகளாக ஆலோசனை கூறிவருகின்றனர்.இதற்காக, குளத்தில் களிமண் போர்வை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்கின்றனர். இந்த ஆலோசனையை ஏற்று, அதற்கான பணிகளை ஹிந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பாதுகாப்பு: இது குறித்து, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளரும், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குளங்களை சீரமைத்து வரும் நீரியல் வல்லுனருமான திருநாவுக்கரசு கூறியதாவது: கோடை காலத்தில், வெயிலில் ஆவியாதல் மட்டுமின்றி கோவிலை சுற்றியுள்ளவர்கள் நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சி எடுப்பதும், கோவில் குளம் வறண்டு போவதற்கு காரணம். குளம் அமைந்துள்ள பகுதி, வண்டல் மண் பூமியாக உள்ளது. இதனால், நிலத்தடி நீரை உறிஞ்சும்போது, குளம் வேகமாக வறண்டு விடுகிறது. இதை தடுத்து, கோவில் குளத்தில் ஆண்டு முழுதும் தண்ணீர் நிரம்பி இருக்கும்படி செய்ய முடியும். இதற்காக, கோவில் குளத்தில் உள்ள வண்டல் மண்ணை ஒன்றரை அடிக்கு வெட்டி எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக நல்ல களிமண்ணை குளத்தில் நிரப்ப வேண்டும்.பின்னர், ரோலர் வாயிலாக குளத்தில் களிமண்ணை அழுந்த செய்து, கம்பளம் போல விரிக்க வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில், கிளே பிளாங்கெட் என்று பெயர். குளத்தில் ரோலரை இறக்கும்போது, படிக்கற்கள் பாதிக்காமல் இருக்க ரேம்ப் அமைக்க வேண்டும். ஏனென்றால், ரோலர் 10 முதல் 12 டன் அழுத்தம் கொடுக்கும்போது, படிகற்கள் சிதறிவிடும். படிகளுக்கு சேதம் வராமல் மிகுந்த பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
செலவு குறையும்: திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், இந்த களிமண் ஒரு சில பகுதிகளில் அதிகளவில் கிடைக்கிறது. அதை தேடி கண்டறிந்து எடுத்து வந்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு களிமண் போர்வை போர்த்துவதால், மழைக்காலங்களில் குளத்தில் சேமிக்கப்படும் மழை நீர், அதிக அளவில் நிலத்தடிக்கு செல்வது தடுக்கப்படும். மோட்டார் போட்டும், குளத்தில் உள்ள நீரை நிலத்தடியில் உறிஞ்ச முடியாது. வெயிலில் வழக்கமான ஆவியாதல் மட்டுமே இருக்கும். குளத்தில், ஆண்டு முழுதும் தண்ணீர் நிறைந்து இருக்கும்.இப்பணிகளை மேற்கொள்ள, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு 75 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும். களிமண்ணை விலை கொடுத்து வாங்காமல், இலவசமாக எடுத்து வந்து பயன்படுத்தினால், செலவு பாதியாக குறையும் வாய்ப்புள்ளது. போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களால், இரவு நேரங்களில் மட்டும் இப்பணியை செய்து முடிக்க குறைந்தபட்சம் 45 நாட்கள் ஆகும். பக்தர்களின் நீண்டகால ஏக்கத்தை தீர்க்கும் வகையில், இப்பணியை, அக்., மாதம் வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன், ஹிந்து சமய அறநிலையத் துறை செய்து முடிக்க வேண்டும்.இதற்கு, தன்னார்வலர்களும், தங்கள் பங்களிப்பை அளித்து அறநிலையத் துறையை ஊக்கு விக்க வேண்டும்.இவ்வாறு திருநாவுக்கரசு கூறினார். இது குறித்து, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், திட்டம் தொடர்பான அறிக்கை உள்ளது. அதை பார்த்து விட்டு பேசுகிறேன், என்றார்.
மருந்தீஸ்வரர் கோவிலில்...: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் குளத்தில், களிமண் போர்வை திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. மயிலாப்பூர் குளத்தைவிட, மருந்தீஸ்வரர் கோவில் குளம் அமைந்துள்ள இடம், மணல் பாங்கானது. அங்கு, நீர் எளிதில் பூமிக்குள் சென்றுவிடும். களிமண் போர்வை பணியால், அந்த குளத்தில் ஆண்டு முழுதும் தண்ணீர் தேங்கியுள்ளது.