தஞ்சாவூர்: தஞ்சை மூலை அனுமார் கோவிலில் நேற்று நடந்த தேங்காய் துருவல் அபிஷேக பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். தஞ்சை மேலவீதியிலுள்ள மூலை அனுமார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அனுமார் கோவிலில் ஆனி மாத அமாவாசை வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி நேற்றுக்காலையில் லட்ச ராமநாம வழிபாடும், இதைத்தொடர்ந்து 10 மணிக்கு சிறப்பு தேங்காய் துருவல் பூஜை நடந்தது. இதில், தேங்காய் துருவல்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இத்தகைய சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்றால் வறுமை மற்றும் கடன் தொல்லைகளை மூலை அனுமார் நிவர்த்தி செய்து, அவர்களது துன்பங்களை நீக்குவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அதன் அடிப்படையில் நேற்று நடந்த சிறப்பு பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு 1,008 எலுமிச்சை பழங்கள் மாலை சாற்றி, தீபாராதனை நடந்தது. 18 முறை பக்தர்கள் வலம் வந்து, தங்களது அல்லல்களை போக்க பிரார்த்தனை செய்தனர். ஏற்பாட்டை அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.