மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையாகும். அங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோயிலில் உள்ள 9 துவாரங்கள் உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. ஆன்மிக ரீதியான அமைப்புகளும் பொன்னம்பலத்தில் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான ‘சிவாயநம’ என்பதன் அடிப்படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்து மரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதத்தில் ஜன்னல்களும், 4 வேதம், 6 சாஸ்திரம், பஞ்ச(5) பூதங்களின் அடிப்படையில் துாண்களும் இங்குள்ளன.