திருவனந்தபுரம் சபாபதி கோயிலில் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் இவரை தட்சிணாமூர்த்தியாக கருதி கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுகின்றனர். திருவனந்தபுரம் மூலம் திருநாள் மகாராஜா காலத்தில் பத்மநாப சுவாமி கோயில் பூஜைக்காக நந்தவனம் அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் பழங்காலத்தில் உருவாக்கப்பட்ட பஞ்சலோக நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் ஒன்று இருந்தது. ஆனால் அதற்கு வழிபாடு ஏதும் நடக்கவில்லை. நாளடைவில் நந்தவனத்தைச் சுற்றி குடியிருப்பும், கடைகளுமாக உருவானது. அங்கு குடியிருப்போர், வியாபாரிகள் பல இடைஞ்சல், சோதனைக்கு ஆளாயினர். தீர்வு வேண்டி தேவ பிரசன்னம் பார்த்தனர். நடராஜருக்கு வழிபாடு நடக்காததும், நடராஜர் கோயிலுக்கு எதிரில் அரை கி.மீ., துாரத்தில் உள்ள முத்தாரம்மனின் உக்ர பார்வையும் தான் சோதனைக்கான காரணங்கள் எனத் தெரிய வந்தது. இந்த இரு கோயில்களுக்கு நடுவில் அட்சய பாத்திரம் தாங்கிய அம்பாள் பிரதிஷ்டை செய்தால் பிரச்னை நீங்கும் என பிரசன்னத்தில் கூறப்பட்டது. அதன்படி நடராஜருக்கு நேர் எதிரில் அம்பாள் சிலை பிரதிஷ்டை செய்ததோடு நடராஜருக்கு நித்யபூஜை நடத்த ஏற்பாடு செய்தனர். இதன்பிறகு அப்பகுதியில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டது. கன்னியருக்கு திருமணத்தடை நீங்கவும், திருமணமான பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் நிலைக்கவும், குழந்தைகள் கல்வி மேம்படவும், சித்தபிரமை நீங்கவும் நடராஜருக்கு திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனத்தன்று சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, திருவாதிரை களி நைவேத்யம் செய்கின்றனர். தினமும் மஞ்சச்சோறு (பொங்கல்), பஞ்சாமிர்த நைவேத்யம் செய்யப்படுகிறது. கேரள மக்கள் நடராஜரை தட்சிணாமூர்த்தியின் அம்சமாக கருதுவதால் திங்கள், வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாத்துகின்றனர். தாரா பாத்திரத்தில் புனித நீர் ஊற்றி குளிர்விக்கும் ஜலதாரை வழிபாடும் இங்குண்டு. இதைச் செய்தால் நீண்டகால நோய், எமபயம், வீண்கவலை மறையும். எப்படி செல்வது * திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது வாசல் (டெர்மினல்) கேட் எதிரிலுள்ள பவர் ஹவுஸ் சாலையில் உள்ளது. * தம்பானுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ.,