பதிவு செய்த நாள்
10
ஜூலை
2021
06:07
திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பார்கள். பக்தி மணம் கமழும் இந்தப் பாடலைப் பாடிய மாணிக்கவாசகர் அவதரித்த ஊர் திருவாதவூர். இங்கு குடிகொண்டிருக்கும் திருமறைநாதரை தரிசிப்போம்.
அசுரர்களின் கொடுமை தாளாமல் தேவர்கள் திருமாலிடம் தஞ்சம் புகுந்தனர். இதை அறிந்த அசுரர்கள் திருமாலுக்குப் பயந்து, பிருகுவின் மனைவியான காவ்யமாதாவிடம் அடைக்கலம் புகுந்தனர். அசுரர்களை ஒப்படைக்கும்படி திருமால் காவ்யமாதாவிடம் வேண்ட அவள் மறுத்தாள். கோபத்தில் திருமால் சக்கரத்தை ஏவி அவளது தலையைக் கொய்தார். மனைவியை இழந்த பிருகு, “திருமாலே! உன் மனைவியை நீயும் பிரியக் கடவது,” என சாபமிட்டார். சாபம் தீர பூலோகத்தில் தவமிருந்த திருமால் சிவலிங்கத்தை பூஜித்து வந்தார். அத்தலம் திருவாதவூர் என்றும், சுவாமி திருமறைநாதர் என்றும் பெயர் பெற்றது.
சிவனைப் பாடிய நால்வரில் மாணிக்கவாசகர் குறிப்பிடத்தக்கவர். இந்த ஊரின் பெயரால் அவருக்கு ‘திருவாதவூரார்’ என்றும் பெயருண்டு. அரிமர்த்தனபாண்டியனிடம் அமைச்சராக இருந்த இவர், பாண்டிய நாட்டிற்கு குதிரை வாங்கச் சென்ற இடத்தில், சிவபெருமானே குருநாதராக காட்சியளித்து உபதேசித்தார். கோவணம் உடுத்தி கையில் திருவாசகம் தாங்கியகோலத்தில் மாணிக்கவாசகரை இங்கு தரிசிக்கலாம்.
திருமறைநாதருக்கு வலதுபுறம் சன்னதியில் ஆரணவல்லித்தாயார் அருள்புரிகிறாள். இவளுக்கு வேதநாயகி, மறைநாயகி என்றும் பெயருண்டு. கபில விநாயகர், கஜமுக கணபதி, நாகேஸ்வரர், காளீசர், சிந்தாமணி கணபதி, சுப்பிரமணியர், சூரியன், தட்சிணாமூர்த்தி, நால்வர் சன்னதிகள் இங்கு உள்ளன. பைரவருக்கு இங்கு வழிபட்டதன் பயனாக நாயை வாகனமாக அடைந்தார். திருமறைநாதரை வழிபட்ட சனீஸ்வரர் வாதநோய் நீங்கப் பெற்றார். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் விளக்கேற்ற வாதநோய், சனிதோஷம் நீங்கும். காவல் தெய்வமான புருஷாமிருகத்தின் சிலை விஷ்ணுதீர்த்தத்தின் நடுவில் உள்ளது.
எப்படி செல்வது :
* மதுரையிலிருந்து திருவாதவூர் 25 கி.மீ.,
* மேலுாரில் இருந்து 10கி.மீ.,