திருப்பதி : திருப்பதி வேங்கடமுடையான் கோயிலில் வரும் 16-ம் தேதி (ஆடி மாத பிறப்பு) ஆனிவார ஆஸ்தான உற்சவம் நடக்கவுள்ளதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து ஆண்டு தோறும் கொண்டு செல்லப்படும் வஸ்திர மரியாதைகள் வரும் 15-ம் தேதி காலை திருமலை செல்லவுள்ளன.
இதுபற்றி கோயில் வட்டாரங்கள் கூறியதாவது : திருவரங்கத்துக்கும் திருவேங்கடத்துக்கும் உள்ள தொடர்பு பாரம்பரியமிக்கது. இரண்டு கோயில்களுக்கும் ஸ்ரீராமானுஜர் கணக்கில்லாத கைங்கர்யங்களை செய்துள்ளார். இந்த இரண்டு முக்கிய திவ்விய தேசங்களையும் ஸ்ரீராமானுஜர் தனது இரண்டு கண்களைப் போல கருதி நிர்வகித்து மேம்படுத்தினார். இன்றளவும்¸ திருப்பதியிலும்¸ ஸ்ரீரங்கத்திலும் அன்றாட நிகழ்வுகள்யாவும் "ஸ்ரீராமானுஜ திவ்யாக்ஞாவர்த்ததாம் அபி வர்த்ததாம்" என்ற சொல்படியே நடந்து வருகின்றன. திருமலை வேங்கடமுடையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கையை குவித்து வரும் உண்டியலை அங்கு நிர்மாணித்து அதில் தனஆகர்ஷ்ன" சக்தியை நிலைப்படுத்தியவர் ராமானுஜரே என்பது வரலாற்று செய்தி. இதனால் தான் திருப்பதி கோயிலில் உண்டியலை பார்த்தப்படி ராமானுஜருக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. திருமலைக்கும்¸ திருவரங்கத்திற்கும் நீண்ட காலமாக மங்களப் பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது. எனினும் காலப்போக்கில் அவை நின்று போயின. இப்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம் மாலை¸ சந்தனம்¸ பழங்கள் உள்ளிட்ட பிரசாதங்கள் வேங்கடமுடையான் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆண்டுதோறும் ஆடிமாத பிறப்பன்று திருமலை கோயிலில் நடக்கும் ஆனிவார ஆஸ்தான உற்சவத்தன்று சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு திருமலையில் வரும் 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தான உற்சவம் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு வரும் 15-ம் அதிகாலை புறப்பட்டு இரவு திருமலை சென்றடைந்து அடுத்த நாள் ஆடி மாதம் முதல் தேதி (ஜுலை 16) திருமலை கோயில் ரங்கநாயகலு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வேங்கடமுடையானுக்கு சமர்ப்பிக்கப்படும். முன்னதாக இந்த மங்கள பொருட்கள் வரும் 14-ம் தேதி மாலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்படும். ஏற்பாடுகளை இருகோயில் நிர்வாகித்தினர்¸ அலுவலர்கள்¸ பணியாளர்கள் செய்து வருகின்றனர்.