பதிவு செய்த நாள்
13
ஜூலை
2021
05:07
பெங்களூர: கொரோனா பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரசித்தி பெற்ற பனசங்கரி கோவிலில், கன்னட ஆடி மாதம் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இப்போதுதான், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கும் தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மூன்றாவது அலை பீதி எழுந்துள்ளதால், மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.கன்னட ஆடி மாதம் பிறந்துள்ளதால், அம்மன் கோவில்களில் கூட்டம் அலை மோதுகிறது.பெங்களூரின், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான பனசங்கரி கோவிலில், முந்தைய வாரம் வெள்ளிக்கிழமை, பெருமளவில் பக்தர்கள் குவிந்தனர். கொரோனா விதிமுறைகளை மீறி, சமூக விலகலை பின்பற்றாமல், அம்மனை தரிசித்தனர்.இதை கவனித்த, மாவட்ட நிர்வாகம், ஆடி மாதத்தின் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் பனசங்கரி கோவிலில், பக்தர்கள் நுழைய தடை விதித்துள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு நகர மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது:ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 8 வரை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில், பனசங்கரி கோவிவில் பக்தர்கள் வருகை தர, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24ல் பவுர்ணமி, ஆகஸ்ட் 8ல் அமாவாசை நாளன்றும், பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதியில்லை.கோவில் அர்ச்சகர்கள், நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் முன்னிலையில் பூஜை, கைங்கர்யங்கள் நடக்கும்.வெள்ளி, செவ்வாய் தவிர, மற்ற நாட்களில், காலை 7:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை, சுவாமி தரிசனத்துக்கு வாய்ப்பளிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.