நரிக்குடி: வேண்டுதலை நிறைவேற்றி வரும் மகாசக்தி மாசானம் கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழா பிரசித்தி பெற்றது.
நரிக்குடி மறையூரில் வேண்டுதலை நிறைவேற்றி வரும் மகாசக்தி மாசானி சுவாமி கோயில் உள்ளது. பீடம் மட்டுமே உருவமாக கொண்ட, இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும். 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் திருவிழா தடைபட்டதால், பக்தர்கள் மன வேதனை அடைந்தனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதையடுத்து, நேற்று சிறப்பு பூஜைகளுடன் கோயில் திருவிழா நடந்தது. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பெண்களுக்கு அனுமதி கிடையாது. வேண்டுதல் நிறைவேறினால் திருவிழாவின்போது ஆடு, சேவல் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். இதற்காக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான ஆண் பக்தர்கள் வருவர். அதிகாலை 2 மணிக்கு பூஜைகள் நடக்கும். நேர்த்திக்கடன் செலுத்திய ஆடு, சேவல்களை மொத்தமாக சமைத்து, கோயிலிலே சாப்பிட வேண்டும். யாரும் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. சில நேரங்களில் மிச்சப்படும் உணவை கோயில் வளாகத்திலே ஆழமான குழி வெட்டி அதில் புதைத்து விடுவர். இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைகுரிய கோயிலாக இருப்பதால், இக்கோயில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது.