ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில் ஆன்மிக மரபை மீறி மூடிக்கிடக்கும் வடக்கு, தெற்கு கோபுர நடையை திறக்க இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 4 திசையிலும் கோபுரத்துடன் நுழைவு வாசல்கள் உள்ளது. இந்த நான்கு வாசலிலும் பக்தர்கள் தரிசித்து திரும்பிய நிலையில், 2013ல் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக தெற்கு வாசல் வழியாக பக்தர்கள் உள்ளே செல்ல தடை விதித்தனர். ஆனாலும் தெற்கு வாசல் திறந்தே இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பின் ஜூலை 5ல் இக்கோவில் திறக்கப்பட்டது. ஆனால் வடக்கு, தெற்கு வாசலை திறக்காமல் மூடி கிடப்பதற்கு பக்தர்கள், இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில் : பாதுகாப்பு கருதி வடக்கு, தெற்கு கோபுர வாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க மறுத்தாலும் பரவாயில்லை. ஆனால் ஆன்மிக மரபு மீறி இரு வாசலையும் கோயில் நிர்வாகம் பூட்டி வைத்தது கண்டனத்துக்குரியது. எனவே இரு வாசலையும் திறந்து வைக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம் என்றார்.