பதிவு செய்த நாள்
20
ஜூன்
2012
04:06
66வது படலத்தில் சிவபக்தர்களின் பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் போகம், மோக்ஷம் இவைகளை கொடுக்கக்கூடிய சிவபக்தபிரதிஷ்டையை கூறுகிறேன் என்கிறார். பின்பு பிராம்மணர், க்ஷத்திரியர், வைச்யர், சூத்திரர், இவைகளின் உட்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள் பிராம்மணாதி வர்ணித்தவரின் பெண்கள், ஆசார்யர்கள், அபிஷேகம் செய்து கொண்ட அரசன் இவர்களில் எவர்கள் சிவபக்தியுடன் கூடியதாக விளக்குகிறார்களோ, அவர்கள் இறந்தாலும், ஜீவித்து இருந்தாலும் அவர்களின் உருவத்தை ஏற்படுத்தி பிரதிஷ்டை செய்து பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு சைவர்கள். பாசுபதர் மஹாவ்ருததரர்கள், லாகுலர்கள், பைரவர்கள் முதலியோரும் சிவபக்தர்கள். இப்பேர்பட்ட பக்தர்கள் எந்த தந்திரத்தினால் தீøக்ஷ செய்யப்பட்டவரோ அந்த தந்திரத்தினாலேயே அவர்களுக்கு பிரதிஷ்டை முதலியவைகள் செய்யப்படவேண்டும். ஆனால் எல்லோருக்கும் சைவ சித்தாந்த முறைப்படியே பிரதிஷ்டை செய்வது உயர்ந்தது என கூறப்படுகிறது. பிறகு அந்த சிவபக்தபிம்பங்களின், ஸ்தாபன விஷயத்தில் ஸ்வதந்திரமாகவோ, பாரதீனமாகவோ பிரதிஷ்டை செய்யலாம் என இரண்டு விதமான முறை கூறப்படுகிறது. பிறகு கிராமம், நதிதீரம், தீர்த்த புஷ்க்கரணி, அல்லது வனம், சிறியவனம், மலை அல்லது அழகான இடம், ஆகிய இடங்களிலோ ஸ்வபிரதானமாக ஆலயம் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு தேவாலயத்தில் உள்பிராகத்தில் ஆலயம் அமைத்து அங்கு பரிவார சஹிதமாக எந்த விக்ரஹம் ஸ்தாபிக்கப்படுகிறதோ அதுவும் ஸ்வதந்திர ஆலயம் ஆகும். தேவாலயம் முதலிய இடங்களிலும் எல்லா மாளிகை மண்டபம் முதலிய இடங்களிலும் பரிவாரமாக எந்த பிம்பம் ஸ்தாபிக்கப்படுகிறதோ அது பராதீனமாகும் என்று ஸ்வதந்திர பராதீன பிரதிஷ்டையின் லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு கோபுரம் மண்டபம் இவைகளை அமைக்கும் முறையும் நிரூபிக்கப்படுகிறது. பின்பு முன்பு குறிப்பிடபட்ட சிவபக்தர்களின் பிரதிஷ்டை விஷயத்தில், சிவலிங்கம், சிவனுடைய பிம்ப பேதங்கள், ஸ்கந்தன், நந்தி முதலிய உருவபிம்பங்கள், அல்லது இறந்தவரின் பிரதி பிம்பம் இவைகளில் ஏதாவது ஒன்றை கற்சிலை முதலான பிம்பம் செய்யப்படும் திரவ்யங்களால் சுபம் என்ற ஆயாதி, நீளஅளவு கணக்குபடி கூடியதாக அமைக்கப்பட வேண்டும் என கூறுகிறார்.
பிறகு லிங்க விஷயம், பிம்பவிஷயத்திலும், அளவு முறை பிரதிமை அமைக்கும் முறை ஆயாதி என்ற நீள, அளவு முறை விவரிக்கப்படுகின்றன. அங்கு புருஷர்கள் ஸ்திரீகள் விஷயத்திலும் அவ்வாறே அரசர்கள் விஷயத்திலும் விசேஷம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பிரதிஷ்டைமுறை கூறப்படுகிறது. பிரதிஷ்டைக்காக நல்ல காலத்தில் அங்குரார்பணம் செய்து ரத்னன் நியாசம் செய்யவும் என ரத்னநியாச முறைப்படுகிறது. நயனோன் மீலன முறையும் மந்திர பூர்வமாக கூறப்படுகிறது. பிறகு பிம்பசுத்தி செய்து சர்வ அலங்காரயுதமாக கிராமப் பிரதட்சிணம் செய்து லோகபாலர் கடத்துடன் கூடியதாக பிம்பத்தை ஜலாதி வாசம் செய்யவும் என ஜலாதிவாசம் வரையிலான கிரியைகள் கூறப்படுகின்றன. பிறகு யாகம் செய்வதற்காக மண்டபம் அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. பிறகு சில்பியை திருப்தி செய்து விட்டு பிராம்மண போஜனம், புண்யாக பிரோக்ஷணம் இவைகளையும் செய்து வேதிகையின்மேல் நெல் முதலான திரவ்யங்களால் ஸ்தண்டிலம் அமைத்து அங்கு தோல் முதலிய சயன திரவ்யங்களால் 5 சயனம் கல்பித்து பிறகு ஜலாதிவாசத்திலிருந்து பிம்பத்தை ஸ்நான வேதிகைக்கு அழைத்து வந்து முன்பு போல் சுத்தி செய்து வஸ்திரங்களால் போர்த்தி சந்தன புஷ்பங்களால் பூஜித்து ரக்ஷõபந்தனம் செய்து பிம்பத்தை சயனத்தில் அமர்த்தவும். பிறகு இங்கு கிழக்கு பாகத்தில் தலையணை வைத்து அங்கு பிம்ப சிரஸ் எவ்வாறு உள்ளதோ அதன் பிரகாரம் பிம்பத்தை சயனம் செய்து வைக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு சயனாதிவாசம் கூறப்பட்டு கும்பாதிவாசம் கூறப்படுகிறது. அங்கு பிம்ப சிரசின் வடக்கு பாகத்தில் கும்பம் வைக்கவும். அதை சுற்றிலும் வஸ்திர ஸ்வர்ணாதிகளால் அலங்கரிக்கப்பட்டதும் மாவிலை, தேங்காய் முதலியவைகளுடன் கூடவும் சுற்றிலும் எட்டு கும்பம் ஸ்தாபிக்கவும். கும்பத்தில் மந்திரங்களை அர்ப்பணம் செய்யவும். கும்ப முறை, கும்பத்தில் மந்திரன் நியாசமுறை கூறுகிறேன் என்று சொல்லி பூஜிக்க வேண்டிய மந்திரங்கள் நிரூபிக்கப்படுகின்றன. அங்கு ஆத்ம மந்திரமோ ஹம்ஸ மந்திரமோ பூஜிக்கப்பட வேண்டும். ஸ்திரீபக்தர்களின் விஷயத்தில் ஹ்ரீம் காரம் பூஜிக்கப்பட வேண்டும் என்பதான விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
பிறகு பத்னியுடன் கூடியதாக சிவபக்தர்க்கு பிரதிஷ்டை செய்யப்பட்டால் அங்கு மனைவிக்காக பிரதான கும்பத்தின் வடக்கு பாகத்தில் வர்த்தனி ஸ்தாபிக்க வேண்டும். இரண்டு மனைவியுடன் கூடியிருப்பாரேயானால் தெற்கு பக்கத்திலும் வேறு ஒரு வர்த்தனியை ஸ்தாபிக்கவும். பலவித மனைவிகள் இருந்தால் இரண்டு பக்கத்திலும் பலவர்த்தனிகள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். பிறகு ஸ்திரீ பிரதிஷ்டையில் எல்லாவற்றிலும் வர்த்தனியை ஸ்தாபிக்கப்படவேண்டும். பிறகு புருஷ விஷயத்தில் பரிவார கடங்களில் பிருதிவீ முதலான ஐந்து கடங்களும் மனம், புத்தி, அகங்காரம் ஆகியவையும் சேர்த்து எட்டு கடங்களையே, எட்டு கடங்களில் வசுக்கள் லோகபாலகர் இவர்களையோ பூஜிக்க வேண்டும். ஸ்திரீகளின் விஷயத்தில் எட்டு திக் தேவதைகளை பரிவார கடங்களில் பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு புருஷர்கள், ஸ்திரீகள், விஷயத்தில் தத்வ தத்வேரர், மூர்த்தி மூர்த்தீஸ்வரர் நியாசம் மாத்ருகாநியாசம், ஜீவன்நியாசம் ஆகியவைகளின் முறை விளக்கப்படுகின்றன. பிறகு குண்ட சமீபம் சென்று வஸ்திர, சந்தன, புஷ்பங்களால் பூஜித்த பிறகு குண்டசம்ஸ்காரம் அக்னிஸம்ஸ்காரம் செய்து ஹோமகர்மா முடித்து பிறகு பூஜை செய்யவும் என கூறி ஹோம முறையும், ஹோம திரவ்ய நிரூபணமும் விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு இரவு பொழுதை கழித்து காலையில் ஆசார்யன் ஸ்நானம், சந்தியாவந்தனம், நித்யானுஷ்டானம் செய்து பஞ்சாங்க பூஷணத்துடன் தட்சிணைகளை பெற்றுக் கொண்டு மூர்த்திபர்களுடன் கூடி துவார துவாரபாலகர்களை பூஜித்து முறைப்படி, பிம்பம், கும்பம், அக்னி இவர்களை பூஜித்து சயனத்திலிருந்து பிம்பத்தை எடுத்து முறைப்படி வாகனங்களில் ஏற்றி ஆலயத்திற்கு செல்லவும். இந்த ஸ்தாபன காலத்தில் ரத்னநியாஸ மந்திர நியாஸ, பூர்வமாக மாத்ருகான்நியாசம், ஜீவன்நியாசத்தையும் செய்து பூஜிக்கவும் என கூறி மாத்ருகான்நியாஸ ஜீவன்நியாஸ விதி விளக்கப்படுகிறது. பிறகு பரிவார கும்பங்களுடன் கூடி பிரதான கும்பஜலங்களால் அபிஷேகம் செய்யவும் என கூறப்படுகிறது.
பிறகு வஸ்திர, சந்தன, தூப, தீப நைவேத்ய உபசாரங்களாலும் மற்ற உபசாரங்களாலும் சிவபக்தரை பூஜிக்கவும் என்று பிரதிமை ஸதாபிக்கும் முறையும் இவ்வாறு நிரூபிக்கப்படுகிறது. அல்லது பிம்பத்தை ஸயனத்திலிருந்து எடுத்து ஸ்நான வேதிகையில் வைத்து மாத்ருகான் நியாசம் முதலியவைகளை செய்யவும் என்று வேறுமுறை கூறப்படுகிறது. இங்கு சலம், அசலம் என்று இருவித பிம்பங்களை அனுசரித்து பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. பிறகு நித்ய பூஜாவிதி கூறப்படுகிறது. அங்கு ஆதிசைவகுலத்தில் பிறந்தவரும், 5 கோத்திரத்தில் பிறந்தவரும், ஆசவுச, ஸ்நான சந்தியாவந்தனங்களை முடித்த ஆசார்யன் ஆலய பிரவேச முறையும் துவார பூஜாவிதியும் பூதசுத்தி, ஸ்தான சுத்தி, திரவ்ய சுத்தி, மந்திரசுத்தி, பிம்பசுத்தி செய்யும் முறையும் ஆசனமூர்த்தி பூஜையும் ஜீவன் நியாசம், பாத்யாசமன அர்க்யம் செய்யும் முறையும் அபிஷேக முறை வஸ்திரம் ஸமர்பிக்கும் முறைகளான இந்த விஷயங்கள் கூறப்படுகின்றன. பிறகு சந்தன, புஷ்ப, தூப, தீப, உபசாரங்களுடன் கூடி தாம்பூலம் காய்கறிகளுடன் கூடியதான நைவேத்யம் சமர்ப்பிக்கவும். இவ்வாறு நித்யபூஜை முறை மூன்று சந்தியாகாலத்திலோ அல்லது இரண்டு, ஒன்று சந்தியாகாலத்திலோ நித்யபூஜை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. அயனம், விஷுவ, சங்கராந்தி, கிரஹணம் ஆகிய புண்யகாலங்களில் ஸ்நபனம் செய்யவும் என கூறி உத்தம, மத்யம, அதம, பேதத்தினால் மூன்று வித ஸ்நபன முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு உத்ஸவமுறை கூறப்படுகிறது. வசதி இருந்தால் ஒவ்வொரு மாசத்திலும் உத்ஸவம் செய்யவும் அல்லது அந்த சிவ பக்தரின் பிறந்த தினத்திலோ அல்லது கர்த்தாவின் ஜன்ம தினத்திலோ உத்சவம் அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு ஒவ்வொருவருஷமும் கல்யாண உத்ஸவத்துடன் கூடியதாக செய்யலாம். அல்லது ஒரு தினத்திலேயும் செய்து பலிஹோமம் த்வஜாரோஹணத்துடன் கூடியதாக உத்ஸவம் செய்யவும் எஜமானன் விருப்பப்படி செய்யவும் என கூறப்படுகிறது. எல்லா சிவபக்தர்களுக்கும் உத்ஸவங்களில் அவரவர்களுக்கு கூறப்பட்டுள்ள வசதிக்கு தக்கவாறு அஷ்டமங்கலத்துடன் கூடியதான விருஷபத்தை, கொடியில் வரையவும்.
ராத்திரியில் பேரீதாடனம் செய்யவும். பிறகு சந்தனம், புஷ்பம் கூடியதாக இந்திராதி தேவர்களுக்கு பலி கொடுக்க வேண்டும் என உத்ஸவத்தில் செய்ய வேண்டிய விசேஷம் கூறப்படுகிறது. பிறகு உத்சவத்தில் அனுஷ்டிக்க வேண்டிய முறை நிரூபிக்கப்படுகிறது. உத்ஸவ ஆரம்பத்தின் முன் தின இரவில் யாகாதிவாசம் செய்ய வேண்டும் என கூறி வேதிகை குண்டத்துடன் கூடின யாகசாலா விதி கூறப்படுகிறது. பலிகொடுப்பதற்காக உத்ஸவத்திற்கு பெரிய, அல்லது சிறிய சிவபக்தரின் பிம்பத்தை முறைப்படி ஏற்படுத்தி ரக்ஷõபந்தனம் செய்து அந்த பிம்பத்தை வேதிகையின் மத்தியில் நெல் முதலியவைகளால் ஸ்தண்டிலம் அமைத்து அங்கு ஸ்தாபிக்க வேண்டும். பிரதிஷ்டைக்கு கூறப்பட்டுள்ளபடி கும்பங்களை ஸ்தாபித்து தினந்தோறும் காலையிலும் மாலையிலும் ஆசார்யன் தேவதைகளை பூஜிக்க வேண்டும். பிரதிஷ்டை முறைப்படி ஹோமம் செய்யவும் சாயந்திரம், காலையிலும் க்ஷúத்திர, பிம்பத்துடன் கூடி பலிகொடுக்கவும். பலி முடிவில் ஸர்வ அலங்காரத்துடன் கூடியதாகவும் நாட்டியம், பாட்டு இவைகளுடன் கூடியதாகவும் உத்ஸவம் செய்ய வேண்டும். வீதி வலம் வருதல் முறைப்படி செய்யவும். உத்ஸவத்தின் கடைசி தினத்தில் சூர்ணோத்சவம், தீர்த்தவாரி இவைகளை முறைப்படி செய்ய வேண்டும் என்று உத்ஸவத்தின் செய்முறை கூறப்படுகிறது. பிறகு உத்ஸவ காலத்தில் பிரதிதினமும் மூலஸ்தான பிம்பத்திற்கு, விசேஷ பூஜை செய்ய வேண்டும். உத்ஸவ முடிவில் மூலஸ்தான பிம்பத்திற்கும், உத்ஸவ பிம்பத்திற்கும் சுத்தியின் பொருட்டு ஸ்நபனம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. அசக்தாக இருக்கும் பக்ஷத்தில் கொடி ஏற்றுதல் பலி, ஹோமம் இவைகள் இன்றியும் உத்ஸவம் மட்டுமோ செய்யலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு உத்ஸவ விதி நிரூபிக்கப்பட்டது. முடிவில் சிவபக்த பிரதிஷ்டை செய்யும் யஜமானனுக்கு பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு 66வது படலத்தில் கருத்து சுருக்கமாகும்.
1. போக மோக்ஷத்தைக் கொடுக்கின்ற சிவ பக்தர்களின் பிரதிஷ்டையைக் கூறுகிறேன். பிராம்மணர்கள், க்ஷத்திரியர்கள், வைச்யர், நான்காம் வர்ணத்தவர் அதன் உட்பிரிவினர் மற்றும்
2. ஸ்திரீகளோ, குருமார்களோ, பட்டாபிஷேகம் செய்யப்பட்ட அரசனோ அல்லது சிவபக்தியுடன் வாழ்பவர்களோ அல்லது இறந்தோர்களோ
3. அவர்களின் உருவத்தைச் செய்து பிரதிஷ்டித்து பூஜிக்க வேண்டும். சைவர்கள் பாசுபதர்கள் உயர்ந்த நியமமுடையவர்கள்.
4. லாகுள மதத்தவர்கள் பைரவாதிகள் எவ்வழி பற்றி தீøக்ஷ பெற்றவர்களோ அவர்களுக்கு அவ்வழியிலேயே ஸ்தாபனம் முதலானவற்றைச் செய்ய வேண்டும்.
5. அனைவர்க்கும் சைவசித்தாந்த வழியினாலே ஸ்தாபனம் செய்யலாம் தனித்தன்மையானது சைவசித்தாந்தத்தை முக்யமாகக் கொண்டும், மற்ற சாஸ்திரங்களைக் கொண்டும் செய்வது என இரு வித ஸ்தாபனமாகும். தன்னிச்சையாக செயல்படுவதல் (ஸ்வப்ரதானம்) பிறர்க்கு கீழ்படிந்து (பாரங்கம்) என இருவித ஸ்தானம் கூறப்படுகிறது.
6. கிராம ஆரம்பத்திலோ நதிக்கரையிலோ, குளக்கரையிலோ, காட்டிலோ, நந்தவனத்திலோ, மலையிலோ, மனதிற்கு விருப்பமான இடத்திலோ
7. மற்ற இடங்களிலோ, ஸ்வதந்த்ர கோயிலை அமைக்க வேண்டும். தேவாலயத்தின் உள்வீதியின் ஆரம்பத்திலோ, அங்கு நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்தில்
8. பரிவாரங்களுடன் கூடிய ஸ்வப்ரதான ஆலயம் சிறப்பாகும். எல்லா தேவாலயத்தின் ஆரம்பத்திலோ மாளிகை, மண்டபங்களிலோ
9. பரிவாரங்கள் இல்லாமலிருப்பது அங்கம் எனப்படும். மூன்று முழம் முதல் ஆரம்பித்து இரண்டு இரண்டு முழங்களாக அதிகரித்து
10. இருபத்தியொரு முழங்கள் முடிய விமான பரப்பு கூறப்படுகிறது. ஆயாதி அளவுப்படி கர்ப்பக்ருஹம், மண்டபம் முதலானவைகளையும் பிறகு
11. ஆயாதி பிரமாணத்துடன் கோபுரம், சாலா, அமைப்பது சுபமானது. ஆத்யேஷ்டிகா ஸ்தாபனத்துடன் கருவறையை அமைக்கவும் பிறகு
12. மூர்த்தியேஷ்டகா முறை முன்பே கூறப்பட்டது. அதற்காக சிவலிங்கத்தையோ அல்லது சிவ உருவ வடிவங்களையோ அமைக்கலாம்.
13. ஸ்கந்தர், நந்தி முதலான உருவங்களாகவோ, மறைந்தவர் உருவம் போலோ அளவுடன் கற்சிலை முதலிய உரிய வஸ்துக்களினால் அமைக்க வேண்டும்.
14. கருங்கல்லாகவோ, உலோகத்தாலோ, மரத்தாலோ, மண்ணிணாலோ, நவரத்தினத்தினாலோ, பாதி உருவ அமைப்புடனோ, சுவற்றில் எழுதிய உருவமாகவோ படம் முதலியவைகளில் எழுதியோ செய்யலாம்.
15. லிங்கமாகவோ, உருவச் சிலையாகவோ ஆகில் லிங்கத்திற்குச் சொல்லிய வழியில் அவைகளின் அளவு இரண்டையும் எடுத்துக் கொண்டு ஆலயம், கர்பக்ருஹம் பிறகு
16. வாசலிலிருந்து கீழ் மேல் அளவு இவற்றை மானாங்குல அளவாகவோ, ஆறுயவை என்ற பேதத்துடன் கர்த்தாவின் மாத்ராங்குல அளவினாலோ செய்ய வேண்டும்.
17. ஆலயம் முதலான அளவில் ஒன்பது பாகமாகச் செய்வது உத்தமம். மூன்றங்குலம் முதல் அங்குலம் அங்குலமாக உயர்ந்து தொன்னூற்றி ஆறு (96) அங்குலம் வரைக்கும்
18. அளவானது இவ்வாறு ஜாதி ஆயாம்சத்தோடு கூடியதாக சொல்லப்படுகிறது. எட்டு, ஏழு, மூன்று என அதிகரித்து பனிரெண்டு, ஏழு, எட்டு அளவுகளால் குறைந்தும்
19. ஆயம், வ்யயம், யோநி, எட்டாமிடத்தை மறைப்பது, நக்ஷத்திரங்களால் அபகரித்த தினம், ஒன்பது, நான்காமிடம் அபகரித்து ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையால் அபஹரித்து
20. நாளானது, அம்சமாக கூறப்பட்டுள்ளது. யஜமானனுக்கு அனுகூலமானதும் இறந்தவர் பெயரின் எழுத்து எண்ணிக்கையை ஒத்தும் செய்ய வேண்டும்.
21. லிங்கமாக இருந்தாலும் அந்த முறையாலோ உருவச் சிலையாக இருந்தாலும் முறைப்படி கூறப்பட்ட கால பேதங்களின்படி செய்ய வேண்டும்.
22. மறைந்தவரின் உருவத்தை எட்டுதாலப்ரமாணத்தால் செய்ய வேண்டும். அமர்ந்தோ, நின்ற நிலையிலோ, வாஹனமேறிய நிலையிலோ செய்ய வேண்டும்.
23. அமர்ந்தோ, நின்றோ, பத்மாஸநத்திலமர்ந்தோ, சிம்மாஸநத்திலமர்ந்தோ, கீழேயோ, பிரதிஷ்டிக்க வேண்டும். இரண்டு முறையிலாவது செய்யும்படி கூறப்படுகிறது.
24. தனக்கு விருப்பமான ஆஸநத்துடனோ, நாற்கோணவடிவை அடைந்ததாகவோ செய்ய வேண்டும். ஆஸநத்தின் அளவு நீல அகலத்துடன் அழகாக இருக்க வேண்டும்.
25. முன்கூறிய விதிப்படி சிலாலக்ஷண முறைப்படி செய்ய வேண்டும். கேசத்துடனோ, முடிந்த கேசத்துடனோ மொட்டகையாகவோ, ஜடையுடனோ செய்ய வேண்டும்.
26. தீக்ஷõபிஷேகம் (பட்டாபிஷேகம்) செய்யப்பட்ட அரசினாகில் கிரீட மகுடத்துடன் அவரவர் விருப்பமான ஆயுதத்துடனோ, கூப்பிய கைகளுடைய நிலையிலோ
27. எல்லா லக்ஷணங்களுடனும் ஆபரணங்களை அணிந்தவராகவோ, பாடுகின்றவராகவோ, நடனம் புரிபவராக, பூஜை செய்பவராகவோ விருப்பப்படி செய்ய வேண்டும்.
28. பெண்களோவெனில் அவர்களின் உருவத்திற்கொத்த அலங்காரத்துடனோ செய்யவும். இவ்வாறான லக்ஷணத்துடன் பிரதிஷ்டை முதலானவை கூறப்படுகிறது.
29. பிரதிமை செய்யக்கூறப்பட்ட வழியிலேயே மக்கள் மெழுகு முதலியவற்றால் செய்ய வேண்டும். பிறகு பிரதிஷ்டையில் பொருட்டு முன்னதாக அங்குரார்பணத்தை செய்ய வேண்டும்.
30. ரத்னந்யாஸத்தைச் செய்து பிறகு நயோன்மீலனத்தையும் செய்ய வேண்டும். ஸ்தண்டிலத்தை முன்போல் செய்து அதன்மேல் வஸ்திரத்தை வைக்க வேண்டும்.
31. பிரணவ வடிவபீடம் அமைத்து அதன்மேல் சிலையை வைக்கவும். தங்கஊசி முனையால் கருவிழி மண்டலத்தை எழுத வேண்டும்.
32. ஜ்யோதிர் மண்டலத்தை எழுதி (பேன் என்ற பூச்சி அளவு) உசிதமான பார்வையை அமைத்து நேத்ரமந்திரத்தைச் சொல்லி இந்த கிரியை செய்ய வேண்டும்.
33. குருவானவர் தேன், நெய், தங்க அருகினால் பிந்துவால் தொட வேண்டும். தேன், நெய், நிறைந்த பாத்ரமிரண்டை அதற்கு காண்பிக்க வேண்டும்.
34. தங்க நகத்தினால் நேத்ர மந்திரத்தினால் தொட வேண்டும், தான்யம், கன்றுடன் கூடியபசு, கன்யாபெண், பிராமணர்களை
35. தர்சிக்கச் செய்து திரையை நீக்கி பிம்பசுத்தியைச் செய்ய வேண்டும் (ஸர்வ) எல்லா அலங்காரத்துடன் கிராமபிரதட்சிணம் செய்ய வேண்டும்.
36. பிம்பத்தை ஜலத்தில் அதிவாஸம் செய்யவும். லோகபாலர்கள் கும்பங்களையும் ஸ்தாபிக்கவும். யாகத்தின் பொருட்டு மண்டபத்தை இடப்பக்கமோ, முன்னாலோ பக்கங்களிலோ அமைக்க வேண்டும்.
37. அங்கு ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் குண்டங்களை அமைக்க வேண்டும். சிற்பியை அனுப்பிவிட்டு பிறகு பிராமண போஜனத்தை செய்ய வேண்டும்.
38. மேடையின்மேல் நெல்லால் ஸ்தண்டிலம் செய்து முன்போல் சுத்தியை செய்து கிராமபிரதட்சிணம் செய்து
39. ஜலாதிவாஸம் செய்து மண்டபத்தில் குண்டத்தை அமைத்து நெல் முதலியவற்றால் ஸ்தண்டிலம் அமைத்து தோல் முதலியவற்றால் ஐந்து விதமான சயனம் அமைத்து
40. ஆதாரசக்தி ஆனந்தனுடன் தர்மாதிகள் நான்கையும் பூஜித்து மானிடபீடத்தை பிரணவத்தால் அமைக்க வேண்டும்.
41. சிலை முதலான பிம்பத்தை ஸ்நாநவேதிகைக்கு கொண்டு வரவும். சிலையை பீடத்தில் அமர்த்தி முன்சொன்னபடி குருவானவர்
42. வஸ்திரங்களையும் சாத்தி, சந்தனாதிகளாலும், புஷ்பமாலைகளாலும் அலங்கரிக்க வேண்டும். ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட பிம்பத்தை சயனத்தில் வைக்க வேண்டும்.
43. கிழக்கில் தலையணையை வைத்து அங்கு பிம்பசிரஸை வைக்கவும். தலையின் வடக்கு பாகத்தில் பிரதான கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.
44. சுற்றிலும் வஸ்திரம், தங்கம், நூல் சுற்றுக்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தஜலம் நிறைந்த பழம் துளிர்களுடன் கூடிய எட்டு கும்பங்களை வைத்து
45. அவற்றில் நடுவில் பூஜிக்கப்படும் மந்திரங்களின் விதானம் இங்கு கூறப்படுகிறது. ஸ வரிசையின் கடைசி எழுத்து ஹ என்று முதல் ஒலியாகக் கொண்டு புள்ளியுடன் கூடியதாகும் ஹம்
46. ஹம் (இதை) ஆத்ம மந்திரமென்றோ, ஹம்ஸ மந்திரமென்றோ அறியவும். ஸ வுக்கு முடிவான ஹ வினாலேயே பிரம்ம, அங்கமந்திரங்களை அமைக்க வேண்டும்.
47. வித்யாங்கங்களையோ தன் நாமத்துடன் கூடியதாகவோ பூஜிக்க வேண்டும். ஸ்தீரீ பிரதிஷ்டையில் ஹ்ரீங்காரத்தோடு பிரம்மாங்கத்தோடு பூஜிக்க வேண்டும்.
48. தன் பத்தினியுடன் கூடியவராக இருந்தால் அதற்கும் பிரதிஷ்டை கூறப்படுகிறது. பிரதான கும்பத்தின் வடக்கில் மனைவியின் பொருட்டு வர்த்தனீயைச் செய்ய வேண்டும்.
49. இரண்டு பத்தினிகள் இருப்பின் தெற்கில் மற்றொரு வர்த்தனீயை வைக்கவும். அதிகமான பத்னிகளானால் அதற்கேற்ற கலசங்களை இரு பக்கங்களிலும் வைக்க வேண்டும்.
50. எல்லா ஸ்தீரீ பிரதிஷ்டைகளிலும் வர்த்தனிகள் கூறப்படுகின்றது. ப்ருதிவி முதலான பஞ்ச பூதங்கள் மனஸ், அகங்காரம், புத்தி ஆகியவைகள்
51. பரிவார கும்பங்களில் பூஜிக்கத்தக்கவர்கள், அஷ்டவஸுக்களும் ஏற்புடையன. ஸ்தீரீகளின் பரிவாரங்களில் லோகபாலர்களின் மனைவிகள் கூறப்படுகிறார்கள். (1. சசீதேவி, 2. ஸ்வாஹாதேவி, 3. ஸ்வர்காதேவி, 4. வர்காதேவி, 5. காலகண்டி, 6. நிர்மிணீ, 7. நாரிணீ, 8. சுககேதிநீ)
52. ஆண் விஷயத்தில் லோகபாலர்களையோ எட்டு கும்பங்களில் பூஜித்து சந்தனம் புஷ்பம் முதலியவற்றால் தத்வ தத்வேச்வரர்களையும் பூஜிக்க வேண்டும்.
53. ஆத்ம, வித்யா, சிவம் என்பவை தத்வத்ரயம் என கூறப்படுகிறது. ஆத்மா, அந்தராத்மா, பரமாத்மா இவர்களை பரமாத்மனம் எனவும் தத்வாதிபர்களாவர்.
54. தத்வ தத்வோச்வரர்களாக முறையாகப் பூஜிக்கவும், ஸ்திரீகளுக்கும் இம்மாதிரி ஆகும், க்ஷ்மா முதலான மூர்த்திகளும் சம்மதமே.
55. எட்டு மூர்த்திகள் என்ற விஷயத்தில் க்ஷ்மா முதலானோர்களும், அதிபர்கள் இந்தரன் முதலானோர்களும் ஆவர். ஐந்து மூர்த்திகள் என்ற விஷயத்தில் ப்ருத்வீ, முதலானோர்களும் நிவ்ருத்தி முதலான கலைகளும் ஆகும்.
56. அந்தந்த மூர்த்திபர்கள் அவரவர்களின் குண்ட மூர்த்தி ஹ்ருதயத்தில் அதற்குரிய பிரம்ம மந்திரங்களை நியஸித்து பூஜிக்கவும். அ முதல் க்ஷ வரை தலை முதலான பாகங்களில் முறைப்படி நியாஸம் செய்ய வேண்டும்.
57. ஜீவன்யாஸத்தை மூலமந்திரத்தாலும் அங்க மந்திரங்களையும் நியாஸம் செய்யவேண்டும். சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து வஸ்த்ரத்தால் கவச மந்திரம் சொல்லி மூடி
58. பிறகு குண்ட சமீபத்தை அடைந்து அக்னி கார்யங்களை ஆரம்பிக்கவும். முன்போல் குண்ட ஸம்ஸ்காரத்தையும் பின் சிவாக்னியையும் ஸ்தாபித்து
59. அக்னி மத்தியில் பக்தரை ஆவாஹித்து ஹோமம் செய்யவும். சமித்து, நெய், அன்னம், பொறி, எள் முதலிய திரவ்யங்களை மூர்த்திபர்களோடும்
60. புரசு, அத்தி, ஆல் முதலியவற்றை கிழக்கு முதலாகவும், வன்னி, கருங்காலி, நாயுருவி, வில்வம் முதலிய சமித்துக்களால் ஆக்னேயம் முதலாகவும்
61. பிரதானத்தில் புரசு சமித்தையும் நூறு, ஐம்பது, இருபத்தைந்து என்ற எண்ணிக்கையில் ஹோமம் செய்யவேண்டும், பூர்ணாஹுதி செய்து தத்வேசர் களுக்குத் தனியாகவும்
62. மூர்த்தி மூர்த்தீச்வரர்களுக்கு தனியாகவும் மூன்று ஆஹூதிகளையும் செய்து அகோர மூலத்தால் மூன்று ஆவ்ருத்தி பிராயச்சித்த ஆஹுதிகளாக ஆசார்யர் கொடுக்க வேண்டும்.
63. சிரோபாகம் முதல் பாதம் முடிய சாந்தி கும்ப ஜலத்தால் புரோக்ஷித்து பிறகு குருவானவர் அந்தர்பலி, பஹிர்பலியையும் கொடுத்து
64. மீதமுள்ள இரவைக் கழித்து காலையில் குருவானவர் ரித்விஜர்களுடன் ஸ்நானம் செய்து ஸந்தியா வந்தனம் மற்றும் செய்ய வேண்டியவற்றைச் செய்து
65. கவுசிகர் முதலான ஐந்து கோத்திரத்தில் பிறந்தவர்களும் தலைபாகை உத்திரீயம் அணிந்தவராய் பஞ்சாங்க பூஷணர்களாய் தட்சிணையால் மகிழ்ச்சி அடைந்த மனதுடையவராய்
66. அவ்வாறே பூஜிக்கப்பட்டு மகிழ்ச்சியடைந்த மூர்த்திபர்கள், மந்திரம் ஜபிப்பவர்கள் வேதபாராயணம் செய்பவர்கள் ஜ்யோதிடர்கள் சிற்பிகள் ஆகிய இவர்களோடும்
67. ஆசார்யரானவர் த்வாரபூஜை, த்வாரபாலர் பூஜை, கும்பபூஜையும் செய்து அக்னி குண்டத்தில் பூஜையையும் பூர்ணாஹுதியையும் முறைப்படி செய்யவும்.
68. சயனத்திலிருக்கும் பிம்பத்தை எழுப்பி உசித முறையில் வாகனத்திலேற்றி ஆலயம் முதலான இடங்களுக்கோ எடுத்துச் சென்றோ ஸ்நான மண்டபத்திற்கோ கொண்டு வர வேண்டும்.
69. ரத்ன நியாஸத்தை முன்போல் செய்து ஸ்நபனத்தை செய்யவும். ஆஸனத்தில் பிரணவத்தை செய்து மூர்த்தி மூலத்தை பூஜிக்க வேண்டும்.
70. மாத்ருகா நியாஸத்தையும் பிறகு ஜீவன் யாஸத்தையும் செய்யவும். கும்ப ஜலத்தால் அபிஷேகம் செய்து சுற்றியுள்ள கும்பங்களையும் அபிஷேகித்து
71. வஸ்த்ர சந்தன புஷ்பங்களாலும் தூபதீப நைவேத்யங்களாலும் உபசாரங்களாலும் மற்றவைகளாலும் சிவபக்தரைப் பூஜிக்க வேண்டும்.
72. முடிவான உத்ஸவத்தை சக்திக்கு தகுந்தவாறு செய்யவும். அது முதல் கொண்டு அந்த பக்தரை தினந்தோறும் பூஜிக்க வேண்டும்.
73. ஆதிசைவ குலத்தில் தோன்றிய ஐந்து கோத்திரத்திலுதித்தவர்கள் அவசியமான மலவிஸர்ஜநாதிகள், சவுசம், ஸ்நானம், ஸந்தியாவந்தனம் இவற்றை
74. முடித்துக் கொண்டு ஆசார்யன் ஆலயத்தில் பிரவேசித்து ஸாமான்யர்க்கத்தை உடையவராய் திவாரத்திற்கு இருபுறமும் உள்ள புருஷன், ப்ரக்ருதி என்பதான வாயிற்காப்போரை பூஜித்து
75. கர்பகிரஹத்துள் நுழைந்து அழிவில்லாத பரமாத்மரூபியான வாஸ்துவை நடுவில் பூஜித்து பூதசுத்தியை செய்து
76. மந்திர சரீரம் உடையவராய் ஸ்தான சுத்தியையும் செய்து புஷ்பம் அக்ஷதை, ஜலத்துடன் கூடிய விசேஷார்க்யத்தைச் செய்து
77. ஆசார்யர் முன்சொன்னபடி அனைத்து திரவ்யங்களையும் பிரோக்ஷிக்க வேண்டும். பிரணவத்தை முன் கொண்டு நம என்பதை முடிவாகக் கொண்ட மந்திரங்களை மந்திர சுத்தியின் பொருட்டு சொல்ல வேண்டும்.
78. அஸ்த்ர மந்த்ர மயமான ஜலத்தால் பிம்ப சுத்தியின் பொருட்டு சிலை முதலானவற்றை அபிஷேகிக்க வேண்டும். முன்கூறியபடி ஷடுத்தாஸநத்தைப் பூஜித்து
79. அதன் மத்தியில் குருவானவர் மூர்த்தியை அந்தந்த உருவமுடையவராய் அந்தந்த மூலமந்திரத்தாலும் மூர்த்தி மந்திரத்தாலும் பூஜித்து
80. பிறகு ஜீவன்யாஸத்தை செய்து ஹ்ருதயாதிகளையும் பூஜிக்கவும். ஹ்ருதய மந்திரத்தால் பாத்யம் ஆசமனம் அர்க்யங்களை கொடுக்க வேண்டும்.
81. சுத்த ஜலத்தால் அபிஷேகித்து பஞ்சகவ்யங்களை அபிஷேகித்து, பிம்பத்தை துடைத்து வஸ்த்ரம், சந்தனம், புஷ்பம், தூபம்
82. தீப ஸஹிதம் நைவேத்யம் கொடுக்க வேண்டும். உபசாரமாக தாம்பூலத்தையும் இவ்வாறு மூன்று காலங்களிலோ இரண்டு காலங்களிலோ செய்ய வேண்டும்.
83. அல்லது ஒரு கால பூஜை செய்வதானாலும் பலி உத்ஸவத்துடனோ, இல்லாமலோ தீபாந்தமாகவோ நிவேத்யாந்தமாகவோ, சக்திக்கேற்ப பூஜிக்க வேண்டும்.
84. அயனத்திலும், விஷுவ காலத்திலும், மாத பிறப்பிலும் கிரஹணம் முதலானவைகளிலும் முன் கூறியபடி பூஜையை செய்ய வேண்டும்.
85. நடுகும்பத்தில் பக்தரையும் க்ஷ்மா முதலானவர்களை, முதல் ஆவரணத்திலும், பதினாறு ஸ்வரங்களை அதற்கு வெளி ஆவரணத்திலும் அதற்கு அடுத்த ஆவரணத்தில் ககாராதிகளையும் பூஜிப்பது ஏற்புடையது.
86. இவ்வாறு பூஜிப்பது உத்தமமாகும். இரண்டு ஆவரணத்துடன் பூஜை செய்வது மத்யமமாகும். ஒரு ஆவரணத்துடன் பூஜிப்பது அதமம் எனக் கூறப்படுகிறது.
87. உத்ஸவத்தை விமரிசையாகவெனில் ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டும். பக்தருடைய ஜன்மதினத்திலோ கர்த்தாவின் ஜன்ம தினத்திலோ செய்ய வேண்டும்.
88. ஸம்வத்ஸரோத்ஸவ கார்யமானது வொரு வருடமும் கல்யாணத்துடன் ஒன்பது ஏழுநாள், ஐந்துநாள், மூன்று நாள் விழாவாகவோ
89. அல்லது ஒருநாள் விழாவாகவோ பலிஹோமத்துடன் த்வஜாரோஹனம் முதலாக அனைத்தையும் கர்த்தாவின் விருப்பப்படி செய்ய வேண்டும்.
90. எல்லா உத்ஸவங்களிலும் கொடிச் சீலையில் வ்ருஷபத்தை எழுதி அந்தந்த இனத்திற்குச் சொல்லப்பட்ட அஷ்டமங்கலப் பொருட்களுடன் கூடியதாக எழுத வேண்டும்.
91. ராத்திரியில் பக்தரின் அஸ்த்ர தேவருடன் கூட பேரீதாடனத்தைச் செய்து இந்திராதிகளுக்கு சந்தனம், புஷ்பங்களுடன் கூட பலியையும் கொடுக்க வேண்டும்.
92. உத்ஸவத்தின் முதல்நாள் இரவில் யாக அதிவாஸத்தை செய்ய வேண்டும். வேதிகையுடன் கூட யாகசாலையை முறைப்படி அமைத்து
93. கிழக்கு குண்டம் முதலான எட்டு குண்டமோ அல்லது ஐந்து குண்டங்களுடனோ எல்லா மங்களமும் பொருந்தியதாக யாகசாலை அமைத்து அங்குரார்பணத்தை செய்ய வேண்டும்.
94. பலியின் பொருட்டும் உத்ஸவத்தின் பொருட்டும் சிவபக்தர் உருவ சிலையை சிறியதாகவோ, பெரியதாகவோ செய்து ஆசார்யர் முறைப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
95. பிறகு ரக்ஷõபந்தனம் செய்து வேதிகையின் நடுவில் நெல் முதலியவைகளால் ஸ்தண்டிலம் அமைத்து கும்பங்களை ஸ்தாபிக்க வேண்டும்.
96. பிரதிஷ்டா விதியில் கூறிய முறைப்படி அவைகளை பூஜிக்கவும். ஒவ்வொரு நாளிலும் தேவர்களை காலையிலும் மாலையிலும் ஆசார்யர் பூஜிக்க வேண்டும்.
97. சந்தனம், பூக்கள் முதலியவைகளுடன் கடைசியில் ஹோமத்தை செய்ய வேண்டும். இப்பூஜையில் திரவ்யங்கள் பிரதிஷ்டையில் கூறியபடியே ஆகும்.
98. க்ஷúத்ர (மூர்த்தங்களுக்கு) பிம்பத்துடன் கூடியவைகளுக்கு மாலையிலும் காலையிலும் பலியையும் கொடுக்கவும். பலியின் முடிவில் எல்லா அலங்காரத்துடனும் கூடி மூர்த்திகளுக்கு உத்ஸவத்தைச் செய்ய வேண்டும்.
99. வாத்யம், நாட்யத்துடன் கூடியதாக வீதிவலம் வருதலை செய்யவும். முடிவில் சூர்ணோத்ஸவமும் தீர்த்தவாரியும் செய்ய வேண்டும்.
100. ஒவ்வொரு நாளும் மூல பேரத்திற்கு விசேஷமான பூஜையை செய்ய வேண்டும். முடிவில் மூலபேரத்திற்கு சுத்த ஸ்நபனத்தைச் செய்ய வேண்டும்.
101. முனீச்வரர்களே கொடியேற்றமோ, பலிஹோமமோ செய்ய இயலவில்லை என்றால் உத்ஸவம் மாத்ரமோ செய்ய வேண்டும்.
102. எந்த மனிதர் சிவபக்தபிரதிஷ்டையை செய்கிறாரோ அவர் ஆயுள், ஆரோக்யம், வெற்றி; ஐஸ்வர்யம், கீர்த்தி முதலிய பலன்களை அடைவார்கள்.
103. கடைசியில் சிவனுடன் இரண்டறக் கலப்பர். இதில் சந்தேகம் என்பது இல்லை.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சிவபக்த பிரதிஷ்டை முறையாகிற அறுபத்தாறாவது படலமாகும்.