காஞ்சி மகாபெரியவருக்கு தமிழில் ஈடுபாடு அதிகமுண்டு. அவ்வையாரின் பாடல்களையும், ஆண்டாளின் பாசுரங்களையும் போற்றினார். செல்லும் இடங்களில் எல்லாம் திருப்பாவையின் பெருமைகளையும், அவ்வையாரின் மகிமையையும் எடுத்துக் கூறினார். மடத்திற்கு தன்னைத் தேடி வரும் அறிஞர்களிடம் இலக்கியச் செய்திகளைக் ஆர்வமும் கேட்பார். 1932ம் ஆண்டு சென்னைக்கு விஜயம் செய்த மகாபெரியவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பு பத்திரத்தை எழுதி வாசித்தவர் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் மாணவரும், கலைமகள் மாத இதழின் ஆசிரியருமான கி.வா. ஜகந்நாதன். அன்று முதல் மகாபெரியவரின் பக்தராக விளங்கினார் அவர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மகாபெரியவரை தரிசிக்க மறந்ததில்லை. சென்னை மயிலாப்பூர் சம்ஸ்கிருத கல்லுாரியில் மகாபெரியவர் சொற்பொழிவு நிகழ்த்திய போது, அதை எழுத்து வடிவில் கொடுத்தவர் கி.வா.ஜ. தான். அத்தொகுப்பு ‘ஆச்சார்ய உபன்யாசங்கள்’ என்னும் தலைப்பில் இரு தொகுதியாக கலைமகளில் வெளிவந்தன. கி.வா.ஜ.வின் புலமையை மகாபெரியவர் பெரிதும் மதித்தார். தன்னிடம் வரும் தமிழ் ஆர்வலர்களிடம் ‘உங்கள் சந்தேகங்களை ஜகந்நாதனிடம் கேட்டால் விடை கிடைக்கும்’ என்று சொல்லி அனுப்பி வைப்பார். கி.வா.ஜ.வைப் பற்றிச் சொல்லும் போது ‘இவர் கலைமகளுக்கே ஆசிரியர்’ என மகாபெரியவர் புன்னகைப்பார். ஒருமுறை மகாபெரியவர், ‘சம்ஸ்கிருதம், தமிழ் என்னும் பெயர்களுக்கான காரணம் தெரியுமா?’’ எனக் கேட்டார். அடக்கத்துடன் ‘‘சுவாமிகள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன்’’ என்றார் கி.வா.ஜ. ‘‘சம்ஸ்கிருதம் என்றால் ‘செம்மையான மொழி’ என்றார். ‘‘ அதுபோல தமிழ் என்பதற்கும் மனதில் தோன்றும் காரணத்தைச் சொல்கிறேன். ‘ழ’ என்ற ஒலி சம்ஸ்கிருதத்தில் கிடையாது. தமிழுக்கு மட்டும் உரிய சிறப்பு ஒலி ழகரம். இதை உள்ளடக்கி வரும் சொற்கள் எல்லாம் இனிமையைக் குறிப்பதாக இருக்கும். அழகு, குழந்தை, மழலை, பழம் என ‘ழ’ வரும் சொற்கள் எல்லாம் இனிக்கும். ‘ழகரத்தைத் தம்மிடம் உடையது’ என்னும் பொருளில் `தம் + ழ்` = தமிழ் என வந்திருக்கலாமோ?’’ என்றார். ‘‘உங்கள் விளக்கம் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது’’ என்றார் கி.வா.ஜ. ‘‘அந்த மகிழ்ச்சியிலும் ழகரம் இருக்கிறது’’ என்றார் மகாபெரியவர்.