பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள வேதநாயகி அம்மன் சன்னதிக்கு எதிரில் உள்ள சுவரில் மூன்று துவாரங்கள் உள்ளன. இதற்கு பின்னணியில் சுவையான வரலாறு உள்ளது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆண்ட போது 1802ல் சேலம், கோவை மாவட்டங்களுக்கு பவானி நகரமே தலைமையிடமாக இருந்தது. அப்போது கலெக்டராக இருந்த வில்லியம் கரோ என்னும் ஆங்கிலேயர் வேதநாயகி அம்மனின் சிறப்பை கேள்விப்பட்டு தரிசிக்க விரும்பினார். வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அம்மன் சன்னதிக்கு எதிரில் மூன்று துளையிடப்பட்டன. கோயிலுக்கு எதிரில் வசித்த வில்லியம்கரோ துளை வழியே வழிபட்டார். ஒருநாள் இரவு வீட்டில் துாங்கிய போது பெண் ஒருத்தி கலெக்டரை எழுப்பி வீட்டை விட்டு வெளியேறுமாறு தெரிவித்தாள். அவரும் அதை ஏற்று வெளியேறினார். அப்போது வீட்டின் மேற்கூரை இடிந்து தரைமட்டமானது. அம்மன் அருளால் தப்பித்த கலெக்டர் தங்கத்தில் கட்டில் ஒன்று செய்து 1.1.1804ல் காணிக்கையாக வழங்கினார்.