பதிவு செய்த நாள்
21
ஜூன்
2012
10:06
பாலக்காடு: குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான, 64 யானைகளின் வருடாந்திர சிகிச்சைக்காக, எட்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஒதுக்க, தேவஸ்தான நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சொந்தமாக, 64 யானைகள் உள்ளன. இவற்றின் உடல் நலத்தை பேணும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில், மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சிகிச்சை முகாம், வரும் ஜூலை 1ம் தேதி துவங்கி, ஜூலை 30 வரை நடைபெறவுள்ளது. இதில், உடல் நலக்குறைவுள்ள யானைகளுக்கு ஆயுர்வேதம் அல்லது அலோபதி மருந்துகள் மூலம் சிகிச்சை தரப்படும். யானைகள் புத்துணர்வு பெறும் வகையில், 5,760 கிலோ அரிசி, 132 கிலோ சிறு பயறு, 600 கிலோ கொள்ளு, 197 கிலோ அஷ்டசூர்ணம், 384 கிலோ சவனப்பிராசம், 96 கிலோ மஞ்சள் தூள், ஷார்க்கோபெரோள், நவதானியங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்படவுள்ளன. இதற்காக, எட்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஒதுக்க, குருவாயூர் கோவில் தேவஸ்தானம் ஒப்புதல் தந்துள்ளது. யானை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற, பிரபல கால்நடை மருத்துவர் பணிக்கர், டாக்டர்கள் முரளிதரன் நாயர், கிரிதாஸ், தேவன் நம்பூதிரி, ராஜீவ், மகேஸ்வரன் நம்பூதிரிபாட் மற்றும் தேவஸ்தான கால்நடை அதிகாரி உள்ளிட்டோர், யானைகளுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளனர்.