காங்கேயம்: காங்கேயம் காசி விஸ்வநாதர் கோவில் தெப்பக்குளம் தூர் வாரும் பணி, நிதியின்றி பாதியில் நிறுத்தப்பட்டது. காங்கேயம், பழையகோட்டை ரோட்டில், பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவில் சிவன்மலை சுப்பிரமணியஸ்வாமி கோவில் நிர்வாகத்தில் உள்ளது. கோவிலை ஒட்டியே தெப்பக்குளம் உள்ளது. கடும் கோடையிலும் வற்றாத தெப்பக்குளத்தில், 20 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த மாதம், தெப்பக்குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. சுற்றுப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. கோவில் நிர்வாகம் சார்பில், மீன்களை அகற்றுவதுடன், தெப்பக்குளத்தை தூர்வார திட்டமிடப்பட்டது. நன்கொடையாளர் மூலம், தூர் வாரும் பணி துவங்கியது. தெப்பக்குளத்திலுள்ள தண்ணீரை இரண்டு மோட்டர்கள் மூலம் 24 மணிநேரமும் வெளியேற்றினர். இருப்பினும், ஊற்று அதிகமாக வந்ததால், தெப்பக்குளத்திலிருந்து தண்ணீரை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை. இதனிடையே மோட்டாரில் ஒன்று, 15 நாட்களுக்கு முன் குளத்துக்குள் சரிந்து விழுந்தது. போதிய நிதியும் இல்லாததால் பணி பாதியில் கைவிடப்பட்டது. சுற்றுப்பகுதிக்கு நிலத்தடி நீராதாரமாக உள்ள தெப்பக்குளத்தை சீரமைத்து, அகலமான படித்துறை அமைக்க, எம்.எல்.ஏ., மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.