பதிவு செய்த நாள்
21
ஜூன்
2012
10:06
திருநெல்வேலி:பாளை., மேலவாசல் பிரசன்ன விநாயகர் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஜூலை 5ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்காக பிரமாண்ட யாகசாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.பாளை., மேலவாசல் பிரசன்ன விநாயகர் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 5ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரமாண்ட யாகசாலைகள், ஹோம குண்டங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. கும்பாபிஷேக விழா ஜூலை 1ம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், பஞ்சகவ்யம், தனபூஜை, தேவதா அனுக்கை, கணபதிஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கஜ பூஜை, கோ பூஜை, தீபாராதனை நடக்கிறது. மாலையில் விக்னேஸ்வரங பூஜை, தீர்த்த சங்கிரஹணம், பிரவேசபலி, வாஸ்துசாந்தி, தீபாராதனை நடக்கிறது. 2ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகளும், சிறப்பு ஹோமங்களும் நடக்கிறது.5ம் தேதி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, 6வது கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், திரவ்யாகுதி, யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல், காலை 11 மணிக்கு விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 12 மணிக்கு மகா அபிஷேகமும், அன்னதானமும் நடக்கிறது. இரவு திருக்கல்யாணம், பிரசன்ன விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை அம்பாள் வீதியுலா நடக்கிறது.கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி வேதபாடசாலை முதல்வர் செல்வம் பட்டர், கோயில் அர்ச்சகர்கள் குமார் பட்டர், ராமகிருஷ்ணன் குழுவினர் நடத்திவைக்கின்றனர்.