பதிவு செய்த நாள்
25
ஜூலை
2021
07:07
பெங்களூரு : கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, கர்நாடகத்தில் கோவில்களில் பூஜைகள், பிரசாதம் வழங்கவும், கேளிக்கை பூங்காக்கள் திறக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
ஊர்வலம். திருவிழா, கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாவது அலை துவங்கியபோது, ஏப்ரலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரண்டரை மாதத்துக்கு பின், மாநில அரசு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன், திரையரங்குகள், மால்கள் திறக்க அனுமதி அளித்த அரசு, இன்று முதல் ஹிந்து, கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர் உட்பட அனைத்து மத கோவில்கள், வழிபாட்டு தலங்களில் பூஜைகள் நடத்த அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா விதிமுறையை கடைபிடித்து, இன்று முதல் கோவில்களில் பூஜைகள் செய்யவும், பிரசாதம் வழங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், ஊர்வலம். திருவிழா, கூட்டம் நடத்த அனுமதியில்லை. இந்த விதிமுறையை கடைபிடிக்க, பெங்களூரு மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், அனைத்து துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோன்று, கேளிக்கை பூங்காக்கள் திறக்கலாம்.
ஆனால், தண்ணீர் சம்பந்தமான விளையாட்டுகள், சாகச நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி கூறியதாவது:அனைத்து மத கோவில்களிலும் பூஜைகளுக்கு அனுமதி அளிக்குமாறு, முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தேன். இதையடுத்து, பூஜைகள் செய்யவும், பிரசாதம் வினியோகிக்கவும் அரசு அனுமதித்துள்ளதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.