இந்தியாவின் பல இடங்களில் கங்கைக்கு கோயில்கள் இருந்தாலும் உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கா மாதா ஆலயம் சிறப்பானது. மலையிலிருந்து வேகமாக ஓடும் கங்கை சமவெளியில் பாயத் தொடங்குமிடம் ஹரித்வார். அமுதம் அடங்கிய கலசத்தை கருடன் துாக்கிச் சென்ற போது அதிலிருந்து நான்கு சொட்டுகள் நான்கு இடங்களில் விழுந்தன. அவை உஜ்ஜெயின், நாசிக், அலகாபாத், ஹரித்வார். கங்கை நதிக்கரையில் இறந்தால் முக்தி கிடைக்கும். அயோத்தி, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, அவந்திகா ஆகியவை மோட்சம் அளிக்கும் தலங்கள் என்கிறது கருடபுராணம் ஹரித்வாரில் கங்கா தேவி சக்தி மிக்கவராக கருதப்படுகிறார் வட்ட வடிவில் துாண்களும், வெங்காய வடிவில் கோபுரமும் இங்குள்ளன. கோபுரத்தின் அருகில் காவிக் கொடி பறக்கிறது. ஆலயத்தின் பெயரை மூன்று மொழிகளில் எழுதியுள்ளனர். அதில் ஒன்று தமிழ் .‘ஸ்ரீ கங்கா கோவில்’ என்ற வார்த்தைகள் காணப்படுகின்றன. கங்கையின் சிலை சலவைக்கல்லால் ஆனது. மலர் ஆடையுடன், நிறைய வளையல்கள் அணிந்து வெள்ளைக் கிரீடம் சூடியபடி காட்சி தருகிறாள். ஆபரணங்களில் முக்கியமாக பெரிய வளையம் கொண்ட மூக்குத்தி சிறப்பானது. இதையெல்லாம் விட முகத்தில் வெளிப்படும் புன்னகை மன நிறைவைத் தருகிறது. கங்கைக்கு கீழே சிவபெருமான் இருக்கிறார். பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் உள்ளது கங்கம்மா தேவி ஆலயம். கங்கை இங்கு சக்திவடிவாக இருக்கிறாள். இங்கு 1928 முதல் கங்கம்மா ஜாத்ரா நடக்கிறது. மூன்று நாள் கொண்டாட்டமான இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். ராகி கஞ்சியை நிவேதனமாகப் படைத்து பிரசாதமாக தருகின்றனர். காடமல்லீஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் உள்ளது இக்கோயில்.