காஞ்சி மகாபெரியவரிடம், ‘‘சுவாமி... அகிம்சை என்னும் பண்பு எல்லோருக்கும் தேவையா, முழுமையான அகிம்சை என்பது சாத்தியம் தானா’’ என சந்தேகம் கேட்டார் பக்தர் ஒருவர். ‘‘அகிம்சை என்னும் தர்மம் துறவிக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. அவர்களால் இதை முழுமையாக கடைபிடிக்க முடியும். துறவிக்கு அக்னி காரியம் விதிக்கப்படவில்லை. நெருப்பு இருந்தால் ஏதாவது பூச்சி, புழுக்கள் விழுந்து இறக்கலாம். நெருப்பிலே விழுந்தபின் காப்பாற்றுவது கடினம். இதனால் அக்னி வளர்க்கும் ஹோமம் என்பது துறவிக்கு கிடையாது. இல்லறத்தாருக்கு மட்டுமே ஹோமம் விதிக்கப்பட்டுள்ளது. வாழ்வின் இறுதியில் தகனம் என்னும் அக்னி காரியம் கூட துறவிக்கு கிடையாது. துறவியின் உடலை அடக்கம் தான் செய்வார்கள். ஜைனம், பவுத்த மதங்கள் இல்லறம், துறவறம் என அனைவருக்கும் அகிம்சையை போதித்தன. இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்பதால் ஹிந்து மதம் அப்படி செய்யவில்லை. பூரண அகிம்சை துறவிக்கு மட்டுமே நம் மதத்தில் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டைக் காப்பாற்ற போரில் ஈடுபடுவது அவசியம். அப்போது அகிம்சையை கடைபிடிக்க முடியாது. நாட்டுக்காக ஒருவர் உயிர்த் தியாகம் செய்வது விசேஷம் என்றும் சொல்கிறோம். பூரண அகிம்சை என்னும் லட்சியத்தை வாயளவில் பேசலாம். ஆனால் நடைமுறைக்கு சாத்தியம் ஆகாது. குற்றம், குறை, அடிதடி, சண்டை எல்லாம் சமூகத்தில் இருக்கவே செய்யும். அவற்றை போக்க எதிர் நடவடிக்கையில் அரசு யந்திரம் இறங்க வேண்டியிருக்கும். அது ஹிம்சையாகத் தோன்றினாலும் உண்மையில் ஹிம்சையில் அடங்காது. ஏனெனில் செய்கையை விட குறிக்கோள் தான் முக்கியம். மாமிசம் சாப்பிடுவது அகிம்சைக்கு விரோதமானது. ஹிந்துக்களில் சிலர் மாமிசம் உண்பதில்லை. துறவிகளைப் போல தங்களுக்கும் சாந்த குணம் வர வேண்டும் என்பதே அதன் நோக்கம். உணவுக்கும், உணர்வுக்கும் தொடர்பு உண்டு. சைவம் சாப்பிட்டால் நம் உணர்வு, சிந்தனைகள் மென்மையாக இருக்கும். அகிம்சையை முழு அளவில் பின்பற்றாவிட்டாலும் அதை லட்சியமாகக் கொண்டு அடைய முயற்சிப்பது அவசியம். அசைவம் சாப்பிடுவோருக்கும் சைவத்தின் மீது மதிப்பு இருப்பதால் தான் அமாவாசை போன்ற நாட்களில் விரதமிருக்கின்றனர். மனதால் கூட பிறருக்கு தீங்கு எண்ணாமலும், யார் மீதும் பகை இல்லாமலும் வாழ்வதே அகிம்சையின் அடிப்படை. சொல்லால் ஒருவரைத் துன்புறுத்தினாலும் அகிம்சைக்கு விரோதம் தான்’’ என விளக்கம் அளித்தார் காஞ்சி மகாபெரியவர்.