ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனிதருகிறது. இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது. பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது எனக்கூறுகிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்றி உடனடி சாத்தியம் ஆவதில்லை. வேர் பிடிக்காமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பதும் இல்லை. நதிகள் ஓடிக்கொண்டே இருக்கும். அதன் பாதையில் வசந்தங்களையும், துயரங்களையும் சந்திக்கும். அருவிகளில் விழும். குட்டையில் தேங்கும். ஆனாலும் அதன் லட்சியம் கடைசியில் நிறைவேறும். அதுவரை அதன் பயணம் பொறுமையாய் நடந்து கொண்டே இருக்கும். குத்துச்சண்டை போட்டிக்காக களமிறங்க இரண்டு வீரர்கள் தயாராக இருந்தனர். ஒரு வீரன் மற்றொரு வீரனைப் பயமுறுத்தும் விதத்தில் குரல் எழுப்பினான். கோபமுடன் பற்களைக் கடித்தான். எதிரில் நின்றவனோ அமைதி காத்தான். போட்டி துவங்கியதும் கோபக்காரன் அமைதியானவனைக் கடுமையாகத் தாக்கினான்.. ஆனால் நீடிக்கவில்லை. கோபத்தில் சக்தியை இழந்து விட்டான். இந்நிலையில் பொறுமையாக நின்றவன் ஏதும் செய்யாமலேயே வென்றான். பொறுமைக்கு வெற்றி கிடைத்தது. இது போல, சிலுவையில் அறைந்த இயேசுவைச் சோதிக்கும் விதத்தில் முயற்சிகள் நடந்தன. ஆனாலும் தீங்கு செய்வோர் மீதும் இரக்கப்பட்டார். அன்பால் அனைவரது மனதையும் திருத்தினார். பொறுமை கடலினும் பெரிது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.