பதிவு செய்த நாள்
22
ஜூன்
2012
11:06
77வது படலத்தில் துர்கையின் பூஜா முறை கூறப்படுகிறது. முதலில் துர்காபூஜையின் காலம் விளக்கப்படுகிறது. அதில் ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் அஷ்டமியிலும், நவமியிலும் உலகத் தாயான துர்கையை பூஜித்தால் அரசன் துக்கம் இல்லாதவனாகவும், எதிரியை ஜயித்தவனாகவும் ஆகிறான் என கூறப்படுகிறது. பிறகு துர்க்கா பூஜைக்காக உபயோகிக்கப்படுகிற எருமை முதலான பிராணிகள் வதம் செய்தால் அவைகள் நல்ல கதியை அடைகின்றன. அதனால் பாபம் ஏற்படாது என கூறப்படுகிறது. துர்க்கைக்கு எதிராக தேவர்கள் உயிரை விடுகிறார்களோ அவர்களுக்கு ஸ்வர்கவாசம் அப்ஸரஸ்திரீகளின் பிரயமும் ஏற்படுகின்றன. பிறகு துர்க்கா பூஜைக்காக ஒவ்வொரு நகரத்திலும் கிராமம் வீடு பலஇடங்கள் ஆகியவற்றிலும் கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ மண்டபம் அமைக்கவும் என கூறி மண்டபம் அமைக்கும் முறையும் அதில் வேதிகை குண்டம் அமைக்கும் முறையும் விளக்கப்படுகிறது. வேதிகையின் மேல் அரசு சின்னங்களான எல்லா ஆயுதங்களையும் அதிவாசம் செய்து பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு துர்க்கா பூஜை செய்யும் முறை ஹோம முறையும் சுருக்கமாக கூறப்படுகிறது. ஹோம சேஷத்தை குதிரை யானை முதலியவைகளுக்கு கொடுக்கவும் என கூறப்படுகிறது. பிறகு பலவித வாத்ய கோஷசப்தங்களுடன் ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட ஐந்து யானை, குதிரை இவைகளை அலங்காரம் செய்து நகரத்தில் பிரதிதினமும் சுற்றிவர செய்யவும். பிரதிதினமும் அரசன் தங்களுடைய பிதுர்தேவர்களை பூஜித்து ராஜசின்னங்களை பழம் புஷ்பம் மாலை சந்தனம் இவைகளாலும் அப்பம் போன்ற பலவித பக்ஷ்யவிசேஷங்களாலும் வெற்றிலையுடன் கூடிய பல நைவேத்தியங்களாலும் பூஜித்து ஹோம சேஷத்தை யானைக்கு கொடுக்கவும் என கூறப்படுகிறது.
இவ்வாறு துர்காபூஜையில் கார்யங்களின் சுருக்கம் கூறப்படுகிறது. பிறகு பூஜையின் மந்திரங்களை கூறுகிறேன் என்று சொல்லி குடை, குதிரை, கொடி, யானை, பதாகம், கத்தி, கவசம், துந்துபி என்ற வாத்யம், வில், சங்கு, சாமரம், கத்தி, ஸ்வர்ணதண்டம் சிம்மாசனம் இவைகளின் மந்திரங்கள் விளக்கப்படுகின்றன. பிறகு அரசன் அஷ்டமி தினத்தில் துர்காதேவியை பழம், நைவேத்யம், புஷ்பம், தூப தீபம், சந்தனம் இவைகளால் பூஜிக்கவும் என கூறி இந்த பூஜையின் முறை வர்ணிக்கப்படுகிறது. அங்கு தங்கம், வெள்ளி, தாமிரம், கருங்கல், மரம், மிருத்திகை இவைகளால் ஆன பிரதிமைகளில் ஏதாவது ஒரு பொருளால் சக்திக்கு தக்கவாறு பூஜிக்கவும் என கூறப்படுகிறது. அல்லது சித்திரமாகவரையப்பட்ட பிரதிமையையோ பூஜிக்கவும். முன் பகலிலோ மாத்யாஹ்னிகத்திலோ இந்த பூஜையை செய்யவும் என கூறப்படுகிறது. தியானம் செய்வதற்காக உருவத்தின் லக்ஷணம் நன்கு கூறப்படுகிறது. பிறகு பலவிதமான நாட்டிய சங்கீதங்களால் இரவை போக்கி காலையில் அருணோதய வேலையில் பிரதிமையின் முன்பாக எருமையையும், ஆட்டையும் பலி கொடுப்பதாக வெட்டவும். பிறகு மாலை வேளையில் நவமியில் அம்பாளை தேரில் ஏற்றி ராஜ்யத்தை சுற்றிவர செய்யவும். தேர் ஓடும் சமயத்தில் ராஜா சைன்யத்துடனோ அல்லது அவனால் ஏவப்பட்ட வீரனுடனோ, 8 திக்கிலும் பூதங்களுக்கு தேன் நெய் கலந்த அன்னத்தை இந்த மந்திரத்தினால் பலிகொடுக்கவும் என கூறிபலிகொடுக்கவும் மந்திரங்கள் விளக்கப்படுகின்றன. முடிவில் மனிதர்களால் சுமக்கப்பட்டதாகவோ அம்பாளை வலம் வரச்செய்யும் என வேறுவிதமாக கூறப்படுகிறது. இவ்வாறு 77வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. ஹே உயர்ந்த அந்தணர்களே, எல்லா விதமான விருப்ப பயனை தரக்கூடியதும் உலகத்திற்கு ஆபிசாரத்திற்காக ஸ்ரீ துர்கா தேவியின் பூஜை முறையை நான் கூறுகிறேன்.
2. சூரிய பகவான் கன்யா ராசியை அடைந்த பொழுது, புரட்டாசி மாத மூல நக்ஷத்ரம், சுக்ல அஷ்டமியுடன் கூடிய ஸமயம், அந்த புண்ய காலம், மஹா நவமி என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.
3. அல்லது ஐப்பசி மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் மூலம், அஷ்டமி இவைகளுடன் கூடிய புண்யகாலம், மஹாநவமி எனப்படும் இந்த புண்யகாலம் மூவுலகிலும் கிடைப்பது அரிது.
4. ஐப்பசி மாதத்தில் அஷ்டமியிலும், நவமியிலும் ஜகன்மாதாவான துர்கா பரமேச்வரியை ஆராதித்து, துன்பம் முதலான கஷ்டங்கள் நீங்கியவனாய் தன் எதிரிகளை வெல்கிறான்.
5. ஹூங்காரங்களால் கூட்டமாக கைகளைத் தூக்கிக் கொண்டு கத்தியை தரித்த அந்த தேவிக்காக, எருமை முதலிய பிராணிகள் பலியிடப்படுவதால்
6. பாபம் இல்லாமல் அந்த எல்லா பிராணிகளும் நல்ல நிலையை அடைகின்றன. தேவியின் ஆலயத்தின் எந்த பிராணிகள் உயிரை விடுகின்றனவோ
7. அம்பாளுக்கு பலியான அந்த பிராணிகளுக்கு ஸ்வர்கலோகத்தில் வசிக்கும், அப்சரஸ் ஸ்திரீகளுக்கு பிரியமானவர்களாக ஒவ்வொரு இடத்திலும் பட்டணங்களிலும் எல்லோராலும் மரியாதை செய்யப்படுகிறார்கள்.
8. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு காட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் சவுக்யத்தை அளிப்பதிலேயே நாட்டமுள்ள பதினொன்று, எட்டு, ஏழு, கை அளவுகளால் வடக்கு, கிழக்கு திசைகளில் ஆசார்யன்
9. மண்டபத்தை நிர்மாணித்து ஆக்னேய திசையில் (தென் கிழக்கில்) கை அளவிற்கு மேகலை யுடன் கூடிய அரசிலை போல் யோனி குண்டத்தை அமைக்க வேண்டும்.
10. எல்லா ராஜ பரிவார அடையாளங்களையும், எல்லா அஸ்திரங்களையும், எங்கும் வேதிகையின் மேல் பூஜிப்பதற்காக எல்லா இடங்களிலும் அவைகளை இருக்கச் செய்ய வேண்டும்.
11. ஆசார்யன் ஒவ்வொரு தினமும் அந்தந்த மந்திரங்களால் சந்தனாதி வாஸனை திரவியங்களால் அந்த அஸ்திரங்களைப் பூஜிக்க வேண்டும். துர்கை அம்மனுக்கு அந்த மந்திரங்களால் ஹோமம் நடத்தவும்.
12. ஸமித், நெய், ஹவிஸ், பாயசம் ஆகிய இவைகளால் ஹோமம் செய்ய வேண்டும். ஹோம மீதியை யானைகளுக்கும், குதிரைகளுக்கும் காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும்.
13. ரக்ஷõபந்தனம் செய்த ஐந்து யானைகளையும் ஐந்து குதிரைகளையும் நன்கு அலங்கரித்து பலவிதமான வாத்ய கோஷத்துடன் நகரத்தில் தினம் சுற்றி வரும்படி செய்ய வேண்டும்.
14. அரசர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய பித்ரு தேவதைகளை பூஜித்து விட்டு ராஜ சின்னங்களை பழம், புஷ்பம், சந்தனம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.
15. பலவித அப்பம் முதலிய நிவேதனங்களால் தாம்பூலத்துடன் கூடிய நைவேத்யங்களால் பூஜித்த பிறகு, ஹோம மீதியை பட்டத்து யானைக்கு கொடுக்க வேண்டும்.
16. அந்த யானைக்கு ஹோம மீதியை கொடுப்பதால் அரசருக்கு வெற்றி கிடைக்கிறது. அந்த பூஜை மந்திரங்களை சொல்ல இருக்கிறேன்.
17. எப்படி ஆகாயம் பூமியின் நன்மைக்காக பூமியை மறைத்துக் கொண்டு இருக்கிறதோ, அவ்வாறே குடையாகிய நீ, வெற்றி ஆரோக்கிய அபிவிருத்திக்காக அரசனை நீ மறைத்துக் கொண்டு இரு. ஓம் சம் சத்ராய நம:
18. நீ கந்தர்வ குல ஜாதியில் பிறந்தவன் பிர்மா, ஸோமன், வருணன் ஆகியோருடைய ஸத்ய வாக்யத்தால் ராஜ வம்சத்துக்கு அணியாக விளங்குகிறாய். ஓம் தும் துரங்காய நம:
19. ஹே அச்வ, அக்னி பகவானின் மகிமையாலும், ஸூர்ய பகவானுடைய தேஜஸாலும், முனிவர்களுடைய தபஸாலும் விசேஷமாக வெற்றி பெறுவாயாக.
20. பரமேஸ்வரனுடைய, பிரம்ஹசர்யத்தாலும் வாயு பகவானின் பலத்தாலும் கவுஸ்துபம் என்ற ரத்னத்தை ஸமுத்திர ராஜனின் மகனாகிய நீ ராஜகுமாரன் என்றாலும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு
21. ராஜ்யத்திற்கு ஜீவாதாரமான விஷயத்தில் பொய் பேசுபவனும் ராஜ்யத்தின் நலத்தில் கவனம் செலுத்தாத, க்ஷத்ரியன், ப்ரும்மஹத்தி பாபம் செய்தவன் மாத்ரு ஹத்தி, பித்ரு ஹத்தி செய்தவன் எந்த பாப லோகங்களுக்கு செல்வானோ அங்கு பொய் பேசி ஜனங்களுக்கு நன்மை செய்யாத அரசன் போகிறான்.
22. சூர்யனும், சந்திரனும் வாயு பகவானும், எவ்வளவு காலம் நீ செய்த பாபங்களை பார்பார்களோ, அவ்வளவு நாள் காட்டில் வாழ வேண்டிய கதியை விரைவில் அடைவாய். அவர்களது வேகம் உனக்கு இருக்க வேண்டும்.
23. ஹே குதிரையே எங்களுக்காகப் பிராயச்சித்தத்தை அடையுங்கால் யுத்தத்தில் எதிரிகளை வென்று எஜமானருடன் சுகமாய் இரு. ஓம் அம் அச்வாய நம:
24. மஹா பலசாலியான தேவேந்திரனுடைய கொடியே ஸ்வர்கலோகத்தில் உள்ளவரும் ஸ்ரீமன் நாராயணனுடைய த்வஜமாகியுள்ள கருடபகவான் உன்னிடத்தில் சான்னித்யம் கொண்டுள்ளார். ஓம் த்வம் த்வஜாய நம:
25. காச்யபருடைய, புத்ரனும் அமிர்தத்தை அபஹரித்துக் கொண்டு வந்தவரும் மஹாவிஷ்ணுவின் வாஹநமும், போரில் யாராலும் ஆக்ரமிக்க முடியாத வவும், அளவிடமுடியாத எதிரிகளை ஒழித்துக் காட்டியவரும்
26. பலம் நிறைந்த இறக்கைகளை உடையவரும் வாயுவுக்கு ஸமமான வேகம் படைத்த கருடபகவான் த்வஜமாகிய உன்னருகில் எதிரிகளை அழிப்பவைகளே, அச்வதர்மமறிந்த வீரர்களை ரக்ஷிக்க வேண்டும்.
27. குமுதன், ஐராவதம், புஷ்ப தந்தன், வாமணன், சுப்ரதீகன், அஞ்சனன், நீலன், நாகன் ஆகிய எட்டு தேவலோகத்து யானைகள் ஆகும்.
28. இந்த யானைகளின் எட்டு வகையான புத்ரர்களும், பவுத்ரர்களும், காட்டில் பத்ரம், மந்திரம், மிருகம், கருப்பு ஜாதியில் பிறந்த யானைகளாக இருக்கின்றன.
29. வேறுவேறு வனத்தில் பிறந்தவை அந்த யானைகள் காட்டிலுண்டான அந்தக் காட்டனைகளும் வஸீ, ருத்ர, ஆதித்யர்களும் உன்னை ரக்ஷிக்கட்டும்.
30. ஏ யானை சிரேஷ்டனே, தலைவனை ரக்ஷி. உடன்பாடு கடைபிடிக்கட்டும். யுத்தத்தில் வெற்றி அடைவாயாக, நடையில் மங்களங்களை மேற்கொள்.
31. சோமனிடமிருந்து செல்வத்தையும், மஹா விஷ்ணுவிடமிருந்து பலத்தையும் சூர்யனிடமிருந்து தேஜஸ்சையும், வாயுவிடமிருந்து வேகத்தையும் மேரு மலையிலிருந்து ஸ்திரத் தன்மையையும் ருத்ரனிடமிருந்து வெற்றியும் தேவேந்திரனிடமிருந்து
32. யுத்த காலத்தில் உள்ள யானைகளும் திக் தேவதைகளுடன் திக்குகளும் அச்வினி தேவர்களும் கந்தர்வர்களும் நாற்புறமும் பாதுகாக்கட்டும். ஓம் ஹம் ஹஸ்திநே நம:
33. அக்னி பகவான், அஷ்ட வஸூக்கள், ருத்ரர்கள், வாயு, ஸோமன், மஹரிஷிகள், நாகர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பூத கணங்கள், நவக்கிரஹங்கள் ஓம் கம் கஜாய நம:
34. ஆதித்யர்களுடன் கூடிய பிரதம கணங்களும், அஷ்டமாத்ருக்களுடன் கூடிய பைரவரும், சேனாதி பதியான சுப்ரமண்யரும், வருணனும், உன்னிடம் வாஸம் செய்து (புகழை உமக்குத் தரட்டும்)
35. எல்லா எதிரிகளையும் அரசன் கொல்லட்டும், வெற்றி அடையட்டும், எதிரிகளால் நாற்புறமும் வெல்லப்பட்ட தூஷனைகளையுடைய நாய்களே
36. உன்னுடைய தேஜஸால், தூஷணைகள் தொலைந்தன. அவை எதிரிகளின் மேல் காலநேமிவதத்திலும் திரிபுரஸம்ஹாரத்திலும் நடந்தது போல் விழட்டும்.
37. ஹிரண்யகசிபு, யுத்தத்திலும் தேவாசுர யுத்தத்திலும், எப்படி பிரகாசித்தாயோ அப்படி இப்பொழுது உன் பிரதிக்ஞையை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
38. நீலமாகவும் வெண்மையாகவும், உள்ள இந்த கொடியை பார்த்தே அரசனது பகைவர்கள் அழியட்டும். பலவித அஸ்திரங்களாலும் பயங்கர வியாதிகளாலும் யுத்தத்தில் ஜயிக்கப்பட்டவர்களாக ஆகட்டும்.
39. உன்னால் ஜயிக்கப்பட்டவர்கள் உன்னை அடைந்தால் சுத்தர்களாகி உடனே நன்மை அடைந்தவர்களாக ஆகிறார்கள். பூதநா, ரேவதீ, காளராத்ரி என்று எண்ணப்படுகிறார்களோ ஏ கொடியே எல்லா எதிரிகளையும் அழித்து நீ என்னை அண்டியவனாயிருக்கிறாய். ஓம் பம் பதாகாய நம:
40. அஸி:, விசிஸந:, கட்க:, தீக்ஷணதர்மா, துராஸதி:,
41. ஸ்ரீ கர்ப:, விஜய:, தர்மதார:, என்ற எட்டு நாமாக்கள் பிரம்மாவால் உனக்கு கூறப்பட்டுள்ளன. ஓம் கம் கட்காய நம:
42. உனக்கு நக்ஷத்திரம் கிருத்திகை உனக்கு குரு பரமேஸ்வரன் உன்னுடைய உடல் தங்கமயமானது, பிரம்மா, விஷ்ணு உனக்கு
43. தந்தையும் பாட்டனாரும் நீ எங்களை எப்பொழுதும் காப்பாற்று. ஹே கவசமே யுத்தத்தில் எல்லா ஆபத்தையும் அழிக்கிறாய்.
44. என்னை ரக்ஷி, நான் ரக்ஷிக்கத்தக்கவன், குற்றமற்றவனே உனக்கு நமஸ்காரம், ஓம் வம் வர்மனே நம: ஹே துந்துபி வாத்யம் உன்னுடைய கோஷம் எதிரிகளின் உள்ளத்தைக் கலக்க வைக்கிறது.
45. மஹாராஜாக்களுடைய அரண்மனை உனக்கு வாசஸ்தலம், நீ வெற்றியை அளிப்பவன், மேகத்தின் இடியோசையால் உயர்ந்த யானைகள் எவ்வாறு சந்தோஷமடைகின்றனவோ
46. அவ்வாறு உன்னுடைய சப்தத்தால் எங்களுக்கு ஆனந்தம் உண்டாகட்டும். இடியோசை எப்படி ஸ்திரீகளுக்கு பயத்தை கொடுக்கிறதோ அவ்வாறே
47. உன்னுடைய ஒலியானது, எதிரிகளை ருத்ரருடைய கோபத்தால் பயம் உள்ளவர்களாகச் செய்யட்டும். (ஓம் தும் துந்துபயே நம:) எல்லா ஆயுதங்களுக்கும் பெரியவரே (எல்லா வில்லுக்கு நமஸ்காரம்) எல்லா ஆயுதங்களையும் அழிப்பவரே.
48. பாணத்துடன் கூடிய நீங்கள் என்னை எப்பொழுதும் காப்பாற்றுவீர்ராக, இது சாபமந்திரம், ஓம் சம் சாபாய நம: ஹே சங்கே புண்ய ஸ்வரூபமாய் மங்களத்திற்கு மங்களமாகவும்
49. மஹாவிஷ்ணுவால் எப்பொழுதும் தரிக்கப்பட்டதாயும் உள்ள தாங்கள் எனக்கு மன அமைதியை தருவீராக. இது சங்க மந்திரம், ஓம் சம் சங்காய நம:, சந்திரனை போல் பிரகாசிக்கிறவரும் பனிக்கட்டி போல் வெண்மை ஆனதும்
50. தேவர்களுக்கு பிரியமானவருமான ஹே சாமரமே என்னுடைய பாபங்களை விரட்டுவீராக, ஓம் சம்சாமராய நம: இது சாமர மந்திரம், எல்லா ஆயுதங்களுக்கும் முதன்மையான நிர்மாணிக்கப்பட்டது பரமேஸ்வரனால்
51. சூலாயுத நுனியிலிருந்து எடுத்து நல்ல பிடியை தயாரித்து துஷ்டர்களை கொல்வதற்காக சண்டிகா தேவியிடம் கொடுக்கப்பட்டவளாய் இருக்கிறாய்.
52. உன்னால் விஸ்தரிக்கப்பட்ட கத்தியானது தேவர்களுக்கு அளிக்கப்பட்டதாகும். நீ எல்லா தத்வத்திற்கும் அங்கமாகவும், எல்லா அசுபத்தையும் போக்குபவளாயும் இருக்கிறாய்.
53. ஹே கத்தியே என்னை எப்பொழுதும் காப்பாற்று எனக்கு மன அமைதியைக் கொடு என கத்தியின் மந்திரம், ஓம் க்ஷúம் க்ஷúரிகாய நம: துஷ்டர்களை விரட்டுவதற்கும் சாதுக்களை அழைப்பதற்கும்
54. பிரம்மாவால் படைக்கப்பட்டிருக்கிறாய், நீ எனக்கு புகழ், சவுக்யம் முதலியவைகளை கொடு, நீ அரசனுக்கு தேவனாக இருக்கிறாய்.
55. எல்லா எதிரிகளையும், அழிப்பாயாக, தங்க தண்டமே உனக்கு நமஸ்காரம். இவ்வாறு தங்க தண்டமந்திரம் ஓம் கம் கனக தண்டாய நம: எதிரிகளால் தாக்க முடியாததை தர்மத்திற்கு கட்டுப்பட்டது. அமைதியான ஸ்வாபம் உடையவை. சத்ருக்களை கொல்லக்கூடியது.
56. துக்கத்தை அழிக்கவல்லது, தர்மத்தை தரவல்லது அமைதியானது, எல்லா எதிரிகளையும் அழிக்கவல்லது, ஆகிய எட்டு பலம் பொருந்திய எட்டு ஸிம்மங்கள் உன்னிடம் இருக்கிறது.
57. பிராம்மணர்களால் வேதங்களில் ஸிம்மாஸனத்தின் புகழை பாடப்படுகிறது. உன்னிடம் சிவன் பிரத்யக்ஷமாக இருக்கிறான், தேவர்களின் தலைவனாக இந்திரனும் இருக்கிறான்.
58. உன்னிடம் மஹா விஷ்ணு வஸிக்கிறார், உனக்காக தவம் அனுஷ்டிக்கப்படுகிறது. எங்கும் மங்களமயமான உனக்கு நமஸ்காரம், அரசே உனக்கு மங்களம் உண்டாகட்டும்.
59. மூன்று உலகங்களையும் வெற்றி கொள்வாயாக, சாந்நித்யமாக இருக்கும் உனக்கு நமஸ்காரம், இது சிம்மாஸன மந்திரம், மந்திரத்தை முன்னிட்டதாக இந்த உலகபிரசார கர்மாவால் செய்ய வேண்டும்.
60. பழங்கள், புஷ்பங்கள், சந்தனம், தூப, தீப, நைவேத்யம் இவைகளால் அஷ்டமியில் தங்கத்தால் செய்யப்பட்ட துர்கா தேவியை பூஜிக்க வேண்டும்.
61. அல்லது தன்னுடைய சக்திக்கு ஏற்றவாறு வெள்ளியிலோ, செப்பிலோ, கல்லாலோ, மரத்தாலோ அல்லது களிமண்ணாலோ தேவியை நிர்மாணித்து ஆராதிக்கலாம்.
62. அரசர், ஸ்நானம் செய்து எல்லா ஆபரணங்களை தரித்தவராக கரந்நியாஸம் அங்கந்நியாசம் செய்து கொண்டவராக முற்பகலிலோ அல்லது மதியத்திலோ இந்த துர்கா பூஜையை செய்ய வேண்டும்.
63. துர்கை அம்மனுக்கு திவ்ய பரிமளம் நிறைந்த சந்தனம், அகில், பச்சகற்பூரம், ஜவ்வாது, குங்குமப்பூ, முதலியவைகளை காப்பு சாத்தி வாசனை நிறைந்த புஷ்பங்களாலும்
64. நீலோத்பலங்களாலும் வாசனை நிறைந்த பூக்களாலும் தூப, தீபாதிகளுடன் பழங்களுடன், கூடிய விசேஷ நைவேத்யங்களாலும், நர்தனம், கானம் மங்கள வாத்யம் ஆகியவைகளுடன்
65. தும்பை பூக்களாலும், பில்ப பத்ரங்களுடன் எட்டு கைகளுடன் கூடியவளும், மகிஷாஸூரனை வதம் செய்பவளாகவும்
66. சூலத்தை மஹிஷாஸுரன் மார்பில் குத்தியவாறு மேலே தூக்கிய வண்ணம் இருப்பவளும் கபாலம், சூலம் தரித்திருப்பவளும், வில், அம்பு, கத்தி, கேடயம் தரித்திருப்பவளும்
67. சங்கு, சக்ரம் தரித்திருப்பவளும், எல்லா விதமான ஆபரணங்களையும் அணிந்திருப்பவளும் வரத முத்ரையை தரித்திருப்பவளும், ஜபமாலையை ஒலித்துக் கொண்டிருப்பவளும் மஹிஷாஸுரனின் தலைமீது நின்று கொண்டிருப்பவனும்
68. ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பவளும், மூன்று கண்களை உடையவளும், எல்லா எதிரிகளையும் அழிப்பவளும் அல்லது வரத, அபய முத்திரையுடன் கூடிய நான்கு புஜங்களுடன் கூடியவளும்
69. சங்கு, சக்ரம் ஆகியவைகளை தரித்திருப்பவளாயும் பக்தி நிறைந்தவர்களுக்கு பிரியமானவளும், அமைதி தரும் தேவதையும் ஆன மஹிஷாஸுர மர்தினியை பலவிதமான கானங்களாலும் நர்தனங்களாலும்
70. இவ்விதம் ஆராதனையால் இரவை கழித்து காலையில் அருணோதய காலத்தில் மிருதுவான கழுத்தை உடைய ஆட்டையும், மஹிஷத்தையும் கத்தியால் வெட்ட வேண்டும்.
71. நூறு, ஐம்பது, இருபத்தி ஐந்து, பன்னிரெண்டு இஷ்டபிரகாரம் பலியிடலாம். பிறகு பிற்பகலில் நவமியில், தேரில் அமர்ந்திருக்கும்.
72. துர்கையை, அரசர், சைன்யங்கள், சூழ ஊர்வலம் நடத்த வேண்டும். ராஜாவால், ஏவப்பட்ட வீரன்
73. நெய்யுடன் கூடியதும், தேன் நிறைந்ததுமான அன்னத்தை நான்கு திசைகளிலும் நான்கு மூலைகளிலும் இந்த மந்திரத்தைச் சொல்லி பூதங்களுக்கு பலி போடவேண்டும்.
74. இந்த பலியை தேவர்களும் ஆதித்யர்களும் வஸீக்களும், மருத்துக்களும், அசிவீனி தேவர்களும், ருத்திரர்களும், ஸூபர்ணர் (என்ற கருடனும்) நாகர்களும் கிரஹங்களும்
75. அஸீரர்களும், ராக்ஷஸர்களும் மாத்ரு தேவதைகளும், பாம்புகளும், பிசாசங்களும், டாகினீகளும், பைரவர்களும், யோகினிகளும், பெண் தெய்வங்களும், பெண் நரிகளும்
76. ஆண் நரிகளும், ஸித்தர்களும், கந்தர்வர்களும், வீரர்களும், வித்யாதரர்களும், மனிதர்களும், திக்பாலர்களும், லோகபாலர்களும் மற்றும் உள்ள வினாயக தேவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
77. உலகத்திற்கு சாந்தியை அளிக்கும் சத்கர்மாக்களை பிராம்மணர்கள், மாமுனிவர்கள் செய்யட்டும் எனக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனக்கு எதிரிகள் இருக்க வேண்டாம்.
78. பூதங்கள், பிரேதங்கள் அஸூரர்கள் திருப்தி அடைந்து சாந்தர்களாக இருக்கட்டும் என்று பிராத்தனையுடன் தேவியை ஊர்வலமாக எழுந்தருளச் செய்ய வேண்டும், அல்லது பக்தர்களால் தூக்கப்பட்டு எல்லா விதமான விக்னங்களையும் போக்கடிக்கும் தேவியை ஊர்வலமாக எழுந்தருளச் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் துர்காபூஜா விதியாகிற எழுபத்தி ஏழாவது படலமாகும்.