ஆதிசேஷனே ராமாவதாரத்தில், அவரது தம்பி லட்சுமணனாக வந்தார். (கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறந்தார். ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் தங்கி இருந்த புளியமரமாக அவதாரம் செய்தவரும் ஆதிசேஷனே. உடையவராக வந்தவரும் அனந்தனே.
எம்பெருமான் எங்கே சென்றாலும் ஆதிசேஷனை விட்டு பிரிய மாட்டார். அப்படியொரு அந்நோன்யம் இருவருக்கும் உண்டு. அதனால்தான் நம்மாழ்வாராக எம்பெருமான் அவதரிக்க விருப்பம் தெரிவித்தபோது, அனந்தனை உடனே நீ சென்று பூவுலகத்தில் புளிய மரமாக நின்று கொள். நான் அங்கே வந்து அந்த மரப்பொந்தில் வாசம் செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார். அப்படியே செய்தும் காட்டினார். அதனால்தான் நம்மாழ்வார் அவதார ஸ்தலமாகிய ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூர் இன்றும் கூட சேஷ க்ஷேத்திரம் அதாவது ஆதிசேஷன் இருப்பிடம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த க்ஷேத்திரத்தில் ஆதிசேஷன் புளிய மரமாக இருக்கிறார்.