பதிவு செய்த நாள்
12
ஆக
2021
10:08
வடவள்ளி: மருதமலை, பேரூர் மற்றும் பூண்டி கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் கோபுரத்தை வணங்கி சென்றனர்.
கோவையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை ஆகிய தினங்களில், கோவில்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அதன்பின், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும், பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆடிப்பூரத்தை ஒட்டி, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கோவில்களில் வழக்கம் போல, நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மருதமலை அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டு சென்றனர். மற்ற கோவில்களில், கோவில் கோபுரங்களின் முன் நின்று பக்தர்கள் சுவாமியை வழிபட்டு சென்றனர். இன்று, கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதன்பின், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.