பதிவு செய்த நாள்
15
ஆக
2021
01:08
சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்ற, அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார், ஓதுவார், பணியாளர்கள் உள்ளிட்ட, 208 பேருக்கு பணி நியமனஆணைகளை, முதல்வர்ஸ்டாலின் வழங்கினார்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, முதல்கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் காலியாக உள்ள அர்ச்சகர், பட்டாச்சாரியார், ஓதுவார், பூசாரி, தொழில்நுட்ப உதவியாளர், காவலர், அலுவலக உதவியாளர், மின் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதையடுத்து, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை வாயிலாக, அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து தேர்வு பெற்ற 24 பேர்; பாடசாலையில் பயிற்சி பெற்ற, 34 அர்ச்சகர்கள் உள்ளிட்ட, 208 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதற்கான விழா, சென்னை ஆர்.ஏ.புரம், கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நல நிதி மற்றும் ஓய்வூதியர்கள், ஐந்து பேருக்கு ஓய்வூதிய உத்தரவையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாச்சல அடிகள், குமரகுருபரசுவாமிகள், அமைச்சர்கள் சேகர்பாபு, நேரு, சுப்பிரமணியன், அறநிலையத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இணை கமிஷனர் காவேரி செய்திருந்தார்.