நாடு சுதந்திரம் அடைவதற்கு முற்பட்ட காலம் அது. மகாமகத்தை முன்னிட்டு காஞ்சி மகாபெரியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம் கோயிலில் தங்கியிருந்தார். அவரை தரிசிக்க மக்கள் கூடியிருந்தனர். கூட்டத்துடன் சேராமல் தயக்கமுடன் நின்றிருந்தார் காவியாடை அணிந்த ஒருவர். மகாபெரியவரை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் அவரது கண்களில் தெரிந்தது. அருகில் நின்ற உதவியாளரை அழைத்து, அதோ... காஷாய உடையில் நிற்கிறாரே... அவரைக் கூப்பிடு’’ என உத்தரவிட்டார் மகாபெரியவர். அவரும் தயங்கியபடி வந்தார். உண்மையில் கூட்டத்தை அவர் விலக்கவில்லை. அவரைப் பார்த்ததும் கூட்டம் தானே விலகியது. காரணம் அவருக்கு தொழுநோய். அருகே அழைத்த மகாபெரியவர் கனிவுடன் அவரை பார்த்தார். நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கிய அவருக்கு பிரசாதம் கொடுத்தார். அப்போது, ‘‘என்ன வேண்டும்’’ என விசாரித்தார். ‘‘சுவாமி...என் இரண்டு பிரார்த்தனைகள் நிறைவேற அருள்புரிய வேண்டும். ஒன்று நம் நாடு ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற வேண்டும். இன்னொன்று மக்கள் அனைவரும் பக்திநெறியில் ஈடுபட வேண்டும். நம் நாட்டின் அடிநாதம் தெய்வீகம்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். இதற்கு தாங்கள் தான் அருள் புரிய வேண்டும்’’ என்றார். தொழுநோயால் வாடும் ஒருவர், தான் உடல்நலம் பெற வேண்டும் என்று வேண்டவில்லையே. நாட்டு மக்கள் நலமாக இருக்க வேண்டும் என பொது நலனில் அக்கறை கொண்ட அவரின் தேசபக்தி கண்டு மகாபெரியவர் வியந்தார். ‘‘நான் மனமார பிரார்த்தித்துக் கொள்கிறேன். கட்டாயம் இரண்டு விருப்பங்களும் நிறைவேறும். அம்பிகை நிச்சயம் நிறைவேற்றித் தருவாள். ஏனெனில் இரண்டுமே நியாயமானவை’’ என்றார் மகாசுவாமிகள். மனநிறைவுடன் மகாபெரியவரை வணங்கி விடைபெற்றார் அந்த காவியுடைக்காரர். அவர் யார் தெரியுமா.... வ.உ.சி.யின் வலக்கரமாகத் திகழ்ந்தவரும், ஆங்கிலேயர்களால் சிறை தண்டனை அளிக்கப்பட்டு தொழுநோயுடன் வெளியே வந்தவரும், தன் கடைசி மூச்சு வரை தேசத்தொண்டில் ஈடுபட்டவரும், தேசியம், தெய்வீகத்தைக் கண்களாகப் போற்றியவருமான சுதந்திரத் தியாகி சுப்பிரமணிய சிவா.