கர்நாடக மாநிலத்தில் உள்ள மலைவாச ஸ்தலமான மெர்க்காரா எனப்படும் மடிக்கரேவில் ஓங்காரேஷ்வர் கோயில் உள்ளது. மலை மீதிருக்கும் மகாதேவனான இவரை தரிசித்தால் கிரகதோஷம், கொடிய பாவங்கள் பறந்தோடும். 18 ம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் லிங்க ராஜேந்திரன். கொடுங்கோலனான இவர் அரசியல் சூழ்ச்சியால் நேர்மை தவறாத அந்தணர் ஒருவரைக் கொன்றார். கொலைக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அந்தணரின் மகளை அடைய விரும்பி சூழ்ச்சியில் ஈடுபட்ட மன்னர் கொலை செய்தார். அதன் காரணமாக பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளாகி நிம்மதியின்றி தவித்தார். இதிலிருந்து விடுபட ஆன்மிக பெரியவர்களிடம் ஆலோசித்த போது, சிவபெருமானுக்கு கோயில் கட்டினால் பிரச்னை தீரும் எனத் தெரிவித்தனர். காசி யாத்திரை சென்ற மன்னர் அங்கிருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். கோயிலின் நடுவில் வசீகரமான குவி மாடமும், அதன் நான்கு மூலைகளில் ஸ்துாபிகள், அதன் மீது சிவனின் வாகனமான நந்திகள் உள்ளன. குவிமாடத்தின் மீது முலாம் பூசிய உருண்டை வடிவ அமைப்பும், திசை காட்டும் கருவியும் உள்ளது. கோயில் படிகளில் ஏறியதும் வளைவான வாசல் உள்ளது. அதன்கீழே இரண்டு மணிகள் தொங்குகிறது. படியறேியதும் மூலவர் ஓங்காரேஷ்வரை தரிசிக்கலாம். மற்ற கோயில்களைப் போல இங்கு பெரிய கூடமோ, துாண்களால் ஆன மண்டபமோ இங்கு இல்லை. கருவறையின் பெரிய கதவில் பஞ்சலோகத்தால் ஆன ஜன்னல்கள் உள்ளன. பிரகாரத்தைச் சுற்றி புராண, இதிகாச ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கோயில் வாசலில் குளமும், அதைச் சுற்றி நீண்ட மதில்களும் உள்ளன. எப்படி செல்வது மைசூருவில் இருந்து 118 கி.மீ., பெங்களூருவில் இருந்து 267 கி.மீ.,