பதிவு செய்த நாள்
16
ஆக
2021
10:08
சைதாப்பேட்டை: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசு திட்டத்தின் கீழ், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர், ஆகம விதிகளை மீறி பூஜை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் அறிவிப்பை அடுத்து, சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிரிதரன் என்பவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.இவர், நேற்று முன்தினம் பணிக்கு சேர்ந்து, பூஜைகளை செய்தார். இந்நிலையில், காரணீஸ்வரர் கோவில் உள்ள சிவசுப்ரமணியர் சன்னிதியில் நேற்று இரவு பூஜை செய்தார். இவர், அர்த்தஜாம பூஜைகள் முடிந்த பின், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தீபாராதனை காட்டி, ஆகம விதிகளை மீறி பூஜை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு, சிவாச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து தமிழக சிவாச்சாரியார்கள் சமூக நலச்சங்கத்தின், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் கூறியதாவது:நாங்கள், ஏழு ஆண்டுகள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று, மந்திரங்களை படித்து வருகிறோம்.
அரசின் தற்போதைய செயல், எங்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பறிப்பதாக உள்ளது. நாங்கள், 90 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் தான் எங்களுக்கு அரசு வேலை கிடைக்கும். சிவாச்சாரியார்கள் மட்டுமே உள்ள கோவில்களில், பிற ஜாதியினரை நியமிப்பதின் வாயிலாக எங்கள் சமுதாயம் அழிய வேண்டும் என நினைக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, காரணீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரி ராஜா இளம்பரிதி கூறுகையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தின் கீழ் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ஆகம விதிகளை மீறி பூஜை செய்யவில்லை. கோவிலில் உள்ள அர்ச்சகர்குளுக்கு அவரை பிடிக்கவில்லை என்பதால், பொய்யான குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர், என்றார்.