பதிவு செய்த நாள்
16
ஆக
2021
02:08
உடுமலை: பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவிலை, புதுப்பிக்க, இந்து அறநிலையத்துறையினர் பல கட்ட ஆய்வு நடத்தியுள்ள நிலையில், அரசு விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.உடுமலை சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவில் உள்ளது. உப்பாறு படுகை வரலாற்றின் ஆவணமாக காணப்படும் இந்த கோவில், போதிய பராமரிப்பில்லாமல், பொலிவிழந்து வருகிறது.
இருகருவறை; ஒரே தெய்வம் என பல்வேறு சிறப்புகளை பெற்ற கோவிலின் முன்மண்டபம், கோபுரம், மேற்கூரை பழுது, கொடி மரத்தில் விரிசல், தரைதளம் சிதிலம் உட்பட கோவிலில் தற்போது பல்வேறு பிரச்னைகள் உள்ளது.கோவிலை பாதுகாக்கும் வகையில், பக்தர்கள், தாங்களாக ஒருங்கிணைந்து, சில மேம்பாட்டுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கோவிலை முழுமையாக புதுப்பிக்க, இந்து அறநிலையத்துறை வாயிலாக, அரசு நிதி ஒதுக்கீடு செய்வது அவசியமாகியுள்ளது.இக்கோவில் திருப்பணிகளை, 14வது நிதி ஆணைய நிதி ஒதுக்கீட்டில், மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, கடந்த, 2015ல், ஆய்வு செய்யப்பட்டது.அப்போது, பழமை வாய்ந்த கோவிலாக இருப்பதால், விதிமுறைகளின்படி, தொல்லியல் துறையின் தொழில்நுட்ப கருத்துரு பெற்ற பிறகே, துறை சார்பில், மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும்.தொல்லியல் வல்லுனர்கள், கோவிலில் ஆய்வு மேற்கொண்டு, தொன்மை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கை அடிப்படையில், கல்கட்டுமானமாக உள்ள கோவில், முழுவதுமாக பிரித்தெடுக்கப்பட்டு, விரிவான முறையில், முழுமையாக திருப்பணி மேற்கொள்ளப்படும், என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பின்னர் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது, தமிழக அரசு, பழமையான, நுாறு கோவில்களில், உடனடியாக திருப்பணி துவக்கப்படும் என தெரிவித்துள்ளது.அதன்படி, கண்டியம்மன் கோவிலிலும், சமீபத்தில், ஆய்வு செய்து, கோவிலின் தற்போதைய நிலை குறித்த, அறிக்கை தயாரிப்பதற்கான தகவல்களை சேகரித்து சென்றுள்ளனர்.இதனால், கண்டியம்மன் கோவில் திருப்பணிக்காக, அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கும் என்ற எதிர்பார்ப்பில், அப்பகுதி மக்கள் உள்ளனர்.