பதிவு செய்த நாள்
19
ஆக
2021
09:08
மதுரை: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தின்கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட கீழமாசிவீதி தேரடி கருப்பசாமி கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர் அருண்குமார் 29.
மதுரை ஆனையூரைச் சேர்ந்த இவர் 2006ல், வேத மந்திரங்கள் கற்றுக்கொண்டு 15 ஆண்டுகளாக வருமானவரி காலனி குடியிருப்பு, அவனியாபுரம் பாலமீனாம்பிகை கோயில்களில் அர்ச்சகராக இருந்து வந்துள்ளார். தற்போது அரசால் தரப்பட்ட பணி வாய்ப்பு குறித்து அவர் கூறியதாவது: தினமும் காலை 8:00 முதல் 11:30 மணி வரை, மாலை 5:30 முதல் இரவு 8:15 மணி வரை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சம்பளம் ரூ.11,400. கடவுளுக்கு தினமும் பூஜை செய்வதை பாக்கியமாக கருதுகிறேன், என்றார்.
*திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துபட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், அதன் உப கோயில்கள் ஹிந்து அறநிலையத்துறை வசம் உள்ளன. இங்கு இதே ஊரைச் சேர்ந்த வேளாளர், மூப்பனார் சமூகத்தினர் பூஜை செய்து வந்தனர்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில், காளியம்மன், பகவதியம்மன் கோயிலுக்கு விக்ரம் என்பவரையும், சுப்பிரமணியர், விநாயகர் கோயில்களுக்கு கலையரசன் என்பவரையும் அர்ச்சகராக அரசு நியமித்துள்ளது. இருவரும், பழநி பாடசாலையில் 2007 - -08 ஆண்டில் ஓராண்டு இளநிலை அர்ச்சகர் பயிற்சி பெற்றுள்ளனர். நேற்று முன்தினம் (ஆக.16) பொறுப்பேற்று, வழக்கமான நேரத்தில் கோயில் திறப்பு, மூன்று கால பூஜைகளை நடத்தி வருகின்றனர். சம்பளமின்றி, பரம்பரையாக பூஜை நடத்தி வந்த உள்ளூர் அர்ச்சகர்கள் அதிருப்தியால் கோயிலுக்கு வருவதை தவிர்த்து விட்டனர்.