பதிவு செய்த நாள்
19
ஆக
2021
09:08
சாத்துார்: சாத்துார் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. மடம் சின்ன ஓடைப்பட்டி ஸ்ரீ வன்னி விநாயகர் திருக்கோவில். சாத்துாரில் இருந்து சுமார் 10 கி.மீ. துாரத்தில் உள்ளது. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அடுத்து ஸ்ரீ வன்னி விநாயகர் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தலம் ஆகும். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்க் கொண்ட போது தங்கள் ஆயுதம் மற்றும் கவச உடைகளை வன்னிமரத்தின் பொந்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு வன வாசம் காலம் முடிந்த பின்னர் அவற்றை எடுத்து போரிட்டு வெற்றி பெற்றதாக புராணம் கூறுகிறது. மேலும் வன்னி என்றால் வெற்றி என பொருள். வன்னிமரம் வலம் வந்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் வெற்றிபெறும், திருமணத்தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும். இதன் இலை, காய், சிறிய கிளையை பயணத்தின் விபத்து ஏற்படாமல் காக்கும் கவசமாக இருக்கும் என்றும் கிராம பகுதியில் நம்பிக்கை உள்ளது.
சாத்துார் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் மட்டுமின்றி கோவில்பட்டி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, சங்கரன்கோவில் பகுதி மக்களும் இவ்வழியாக செல்லும் போது வன்னி விநாயகரை தரிசித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வேண்டியவர்களின் மனக்கவலை போக்கும் தெய்வமாக ஸ்ரீ வன்னி விநாயகர் விளங்குகிறார். அரசியல் பிரமுகர்கள், முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகளும் இவரை வணங்க வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா அதி விமரிசையாக இங்கு நடை பெறும். வருடம் தோறும் மார்கழி மாதம் இக் கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருகை தந்து தரிசித்து செல்வர். ஆங்கில புத்தாண்டு தமிழ்வருடப்பிறப்பு, தெலுங்கு வருடப்பிறப்பின்போதும் சங்கடஹர சதுர்த்தி அன்றும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வணங்கி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். புதிய வாகனம் வாங்கியவர்கள், புதிய தொழில் துவங்குபவர்கள் தங்கள் வாகனத்தின் சாவி வண்டியை கொண்டு வந்து சிறப்பு பூஜை போட்டு துவங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக் கோவில் நடை காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை திறந்திருக்கும். பூஜை விபரங்களுக்கு 9994903796 என்ற அலைபேசியில் அழைக்கலாம்.