பதிவு செய்த நாள்
19
ஆக
2021
02:08
மதுரை : அலங்காநல்லுார் அருகே சின்ன இலந்தைகுளத்தில் மிகப்பழமையான நடுகற்கள், நிலக்கொடை எல்லை குறிக்கும் திருமால் சக்கரம் போன்ற ஆழிக்கல்லை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
மதுரை தொல்லியல் ஆய்வு சங்க ஆய்வாளர் தேவி, கோயில் கட்டடக் கலை, சிற்பத்துறை அறிவுச்செல்வம், பாண்டியர்கள் தேடி பயணம் குழு ஆய்வாளர்கள் மணிகண்டன், பேச்சிமுத்து, விக்கிரமன்யுவராஜ், பாலா கூறியதாவது: சின்ன இலந்தைகுளம் வயலில் உள்ள நடுகல்லில்ஆண், பெண் சிற்பம் செதுக்கியுள்ளனர். பெண் சிற்பம் வலது கொண்டை, நெற்றிச்சுட்டி, சூரிய, சந்திர பிறை, காது, கழுது அணி,வளையல், வலது கைபூவுடன்கடக ஹஸ்தத்துடன் காணப்படுகிறது.
ஆண் சிற்பம் ஈட்டி பிடித்து, தோள்வளை, கேயூரம் காப்பணிந்து முறுக்கு மீசையுடன் வைஷ்ணவம் எனும் ஸ்தானக நிலையில் காணப்படுகிறது. இக்கல் அருகே கொண்டை, நெற்றிப்பட்டை, காதில் பூ, தண்டட்டி, கண்டிகை கழுத்து அணியுடன், கையில் கேயூரம், தோள்வளை, இரட்டை காப்பு, உருட்டும் விழி, முறுக்கிய மீசை, குறுவாள் ஒன்றும் வைத்தபடியும், இடது கையில் வில்லும், வலது கை அம்பு எடுப்பது போன்றும் ஒரு வீரனுக்குரிய உருவ அமைப்புடன் தனியாக நிற்கும் ஆண் சிற்ப நடுகல் உள்ளது. பெருமாள் விண்ணகரங்களுக்கு வழங்கிய நிலக்கொடை எல்லையை குறிக்கும் திருமாலின் சக்கரம் போன்ற அமைப்புள்ள மூன்றரை அடி உயர திரு ஆழிக்கல் ஒன்றும் கண்டறிந்தோம். அதன் மூன்று பக்கங்களில் சக்கரம், மற்றொரு பக்கம் சக்கரம், குடை செதுக்கப்பட்டுள்ளது. மேலும் மரத்தடியில் இரு பெண் சிற்பங்கள் புதைந்த நிலையில் உள்ளன என்றனர்.