பதிவு செய்த நாள்
21
ஆக
2021
09:08
திருப்புவனம்:மொகரம் பண்டிகையான நேற்று, பள்ளிவாசல் முன்பாக ஹிந்து மக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராம மக்கள், மொகரம் பண்டிகையை ஒட்டி, காப்பு கட்டி 10 நாட்கள் விரதமிருந்து நேற்று பள்ளிவாசல் முன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் முக்காடிட்டு அமர, அவர்கள் தலை மீது நெருப்பு கங்குகளை வாரி கொட்டினர்.இதனால், தங்களை நோய் நொடி அண்டாது என்பது அவர்களது நம்பிக்கை. தீ மிதி விழாவிற்கு உருவாக்கப்படும் கங்குகளுக்கு நேர்த்திக்கடனாக பலரும் கருவேல மர விறகுகளை வழங்கினர்.
முதுவன்திடலைச் சேர்ந்த லதா கூறுகையில், கிராமத்தில் விளையும் நெல் உள்ளிட்ட அனைத்தும் முதலில் பள்ளிவாசலில் படைக்கப்பட்ட பின் தான் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும். உடல்நிலை சரியில்லாவிட்டால், பள்ளிவாசலில் நேர்ந்து கொண்டால் சரியாகிவிடும், என்றார்.
* தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதுார் கிராமத்தில், ஹிந்து மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்று கூடி, மொகரம் பண்டிகை கொண்டாடினர். 10 நாட்களுக்கு முன் விரதம் இருந்து, ஊரின் மையப் பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில், அல்லா சாமி என அழைக்கப்படும், உள்ளங்கை உருவத்தை வெளியே எடுத்து வழிபாடு நடத்தினர். வீடுகளில் இருந்த பெண்கள், புதிய மண் கலயத்தில் பானகம் கரைத்து, அவல், தேங்காய், பழம் வைத்து, அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டனர். அல்லா கோவில் முன், தீ மிதி விழா நடந்தது. ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகூரில் களையிழந்த மொகரம் தொழுகை: நாகை அடுத்த நாகூர் தர்காவில், மொகரம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு, வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுத்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், நாகூர் தர்கா பகுதி முழுதும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. தர்காவின் அலங்கார வாசல் மூடப்பட்டதால், வெளியூர் யாத்ரீகர்கள் தர்கா வாசலில் நின்று வழிபாடு நடத்தினர்.வழக்கமாக நடைபெறும் மொகரம் சிறப்பு தொழுகை, தர்கா நிர்வாகிகள் சார்பில், தர்காவிற்குள் யாத்ரீகர்கள் அனுமதியின்றி அமைதியாக நடந்தது.