ஆவணி மாதம் திருவோண நன்னாளில் கஷ்யப முனிவர், அதிதி தம்பதியரின் மகனாக வாமனர் அவதரித்தார். இந்நிலையில் அசுரர்குல மன்னன் மகாபலி மூவுலகையும் தன் வசமாக்க விஸ்வஜித் என்னும் யாகம் ஒன்றை நடத்தினான். அங்கு சிறுவனாக வந்த வாமனர் மூன்றடி நிலத்தை தானமாக கேட்டார். வாமனரைக் கண்ட மகாபலியின் குருநாதர் சுக்ராச்சாரியார், தானம் கேட்பவர் மகாவிஷ்ணு என்பதை உணர்ந்து தானம் அளிக்காதே என எச்சரித்தும் மகாபலி கேட்கவில்லை. இதை பயன்படுத்திய வாமனர், திரிவிக்ரமனாக உயர்ந்து நின்று உலகையே இரண்டடியால் அளந்தார். மூன்றாம் அடிக்கு இடம் எங்கே எனக் கேட்க மகாபலி சரணடைந்தான். அவனைத் தன் திருவடியால் பாதாள உலகிற்கு அனுப்பி சிரஞ்சீவிகளில் ஒருவராக்கினார். மகாபலி ஓணத்தன்று தன் மலை நாட்டு மக்களை காண வருவதாக ஐதீகம். வாசலில் பூக்கோலம் இட்டு, ஓணம் ஓணம் பொன்ஓணம் என பாடல்கள் பாடி மகாபலியை கேரளமக்கள் வரவேற்கின்றனர்.